டோனி வரலாற்று நாயகன், கோஹ்லியை விட சிறந்தவர் இல்லை – புவ்னேஸ்வர்

171

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் புவ்னேஸ்வர் குமார், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் மஹேந்திர சிங் டோனி, விராட் கோலி போன்ற வீரர்களை தனது இன்ஸ்டாக்ரம் கணக்கு வாயிலாக புகழ்ந்திருக்கின்றார்.  

மேற்கிந்திய தீவுகள் தலைமைப் பயிற்சியாளர் சுய தனிமைப்படுத்தளில்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கின்றன. எனினும், இந்த வைரஸ் தாக்கம் குறையும் சில நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தோன்றினாலும் வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வராத இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளினை மீள ஆரம்பம் செய்வதற்கான வாய்ப்புக்களோ பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்களோ மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.   

இதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது இரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் நேரடித் தொடர்பினை ஏற்படுத்தும் வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. அந்தவகையில், சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாக்ரம் வாயிலாக தனது இரசிகர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திய புவ்னேஸ்வர் குமார், இரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைய இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் புகழ்ந்திருக்கின்றார்.   

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி. இன் மூவகைக் கிண்ணங்களையும் வென்று கொடுத்த தலைவராகவும் இருக்கும் மஹேந்திர சிங் டோனி பற்றி குறிப்பிட்ட புவ்னேஸ்வர் குமார், “டோனி ஒரு வரலாற்று நாயகன்” எனப் போற்றியதோடு, அவர் இதற்கு மேலதிகமாக ஒரு சிறந்த மனிதர் என்றும் தெரிவித்திருந்தார்.

புவ்னேஸ்வர் இந்திய கிரிக்கெட் அணியில் மஹேந்திர சிங் டோனியின் தலைமையில் அறிமுகமாகியிருந்ததோடு, டோனியின் சிறந்த ஆளுமையின் காரணமாகவே அடிக்கடி உபாதைகளுக்கு ஆளான போதும் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென நிரந்தர இடம் ஒன்றினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவராக செயற்படும் விராட் கோஹ்லி பற்றி குறிப்பிட்ட புவ்னேஸ்வர் குமார், அவரே இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் சிறந்த வீரர் எனத் தெரிவித்திருந்தார். 

அணித்தலைவர் ஒரு பக்கம் இருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பமாக செயற்படும் விராட் கோஹ்லி, பல துடுப்பாட்ட சாதனைகளை தகர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும், கால்பந்து விளையாட்டில் பிடித்த வீரர்? கிறிஸ்டியானோ ரொனால்டோவா அல்லது லியொனல் மெஸ்ஸியா என புவ்னேஸ்வர் குமாரிடம் கேட்ட போது அதற்குப் பதிலளித்த அவர் பார்சிலோனா கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரராக இருக்கும் லியொனல் மெஸ்ஸியே தனக்குப் பிடித்தமான வீரர் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<