பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜனித் லியனகேவால் எடுக்கப்பட்ட பிடியெடுப்பை நினைத்தால் இன்றும் மெய்சிலிர்க்கிறது என இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் உபுல் சந்தன தெரிவித்தார்.
சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே இதனை இவர் தெரிவித்தார்.
>>இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்த வரும் இங்கிலாந்து நிபுணர்<<
“குறித்த பிடியெடுப்பை நினைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றும் அதனை நினைத்தால் உடலில் மெய்சிலிர்ப்பது போன்றுள்ளது. அதேபோன்று மிலான் ரத்நாயக்கவின் ரன்-அவுட்.
இந்த இரண்டு விடயங்களும் போட்டியின் திசையை முழுமையாக மாற்றின. எங்களுடைய சக்தியை அதிகப்படுத்தியது. இதுபோன்ற நல்ல விடயங்கள் பலவற்றை வீரர்கள் செய்தனர்.
வீரர்களின் களத்தடுப்பில் நீங்கள் ஏதாவது நன்மையை காண்கின்றீர்கள் என்றால் அதற்கான முழுமையான பெருமையும் வீரர்களை சேரவேண்டும். அவர்கள் அணிக்காகவும் நாட்டுக்காகவும் இதனை செய்கின்றனர்” என்றார்.
அதுமாத்திரமின்றி அணியின் களத்தடுப்பில் முன்னேற்றங்கள் உள்ளது என்றால், அதற்கு அணியின் பயிற்றுவிப்பாளர்கள், தலைவர்களுடன், நான் இல்லாத சந்தர்ப்பங்களில் அணியின் களத்தடுப்பை கவனிக்கக்கூடிய மனோஜ் அபேவிக்ரமவுக்கும் பெருமை சேரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாம் 2023ம் ஆண்டு களத்தடுப்பில் பின்னடைவை சந்தித்தோம். அடுத்த ஆண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என எமது களத்தடுப்பு தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டோம். உடற்தகுதியை அதிகரித்தோம். 20 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்களாக பயிற்சி நேரத்தை அதிகரித்தோம்.
பந்துவீச்சாளர்களின் களத்தடுப்பை மேம்படுத்துவதே எமது இலக்காக இருந்தது. அவர்களுடன் கடினமான உழைத்துவருகின்றனர். அதன் பிரதிபலனை கடந்த போட்டிகளில் பார்க்க முடிந்தது. குறிப்பாக போட்டிகளில் அவர்களுடைய ஈடுபாடு, கவனிக்கும் தன்மை என்பவையும் இந்த முன்னேற்றத்தில் பங்குவகிக்கின்றது”
>>மெண்டிஸ் – நிஸ்ஸங்கவின் சாதனை ஆரம்பத்துடன் வெற்றியீட்டிய இலங்கை!<<
இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் களத்தடுப்பு ஜாம்பவான்களான ரொஷான் மஹானாம மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் உபுல் சந்தன போன்ற சிறந்த களத்தடுப்பாளர்களை எதிர்காலத்தில் காண முடியுமா? என்ற கேள்விக்கும் இவர் பதிலளித்தார்.
“உண்மையில் எம்மிடம் சிறந்த களத்தடுப்பாளர்கள் உள்ளனர். நாம் இந்த செயன்முறையை தொடர்ந்தும் கொண்டுசெல்ல வேண்டும். அண்மைக்காலத்தை எடுத்துக்கொண்டால் வீரர்களின் அர்ப்பணிப்புடன் களத்தடுப்பில் நாம் இருந்ததைவிட முன்னேறியுள்ளோம்.
களத்தடுப்பு என்பது ஒரு உடற்பாங்காகும். வீரர் ஒருவருக்கு இந்த உடற்பாங்கு இருக்க வேண்டும். பந்துவீச்சில் ஓட்டங்களை விட்டுக்கொடுக்க முடியும். துடுப்பாட்டத்தில் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க முடியும். ஆனால் களத்தடுப்பில் ஒவ்வொரு வீரருக்கும் பங்களிக்க முடியும். இதனை முடியுமளவிற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அதனை வீரர்களிடமும் கூறியுள்ளோம். இதுவொரு சவால். அதனை ஏற்றுக்கொண்டு வீரர்களும் செயற்பட்டுவருகின்றனர்.” என்றார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி நாளை (13) தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<