ஆசியக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

Men's Asia Cup 2025

5
Bangladesh squad for Asia Cup 2025

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண T20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியில் இருந்து முன்னாள் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் சுழல் பந்துவீச்சு அதிரடி சகலதுறை வீரரான மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.  

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணத் தொடரானது செப்டம்பர் 09ஆம் திகதி 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குழு A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், B பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும்  ஹொங்காங் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

மேலும், இத்தொடர்களுக்கான அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் சபைகள் அறிவித்து வருகின்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹொங்காங், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் உள்ளிட்ட அணிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இம்முறை ஆசியக் கிண்ண T20 தொடருக்கான 16 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கையுடன் நடைபெற்ற T20I தொடரில் முதன்முதலாக தலைவராக செயல்பட்டு பங்களாதேஷ் அணியை சிறப்பாக வழிநடத்திய லிட்டன் தாஸ் தலைமையிலேயே ஆசியக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நூருல் ஹசன் மற்றும் சகலதுறை வீரர் சைஃப் ஹசன் ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். இதில் நூருல் ஹசன் 3 ஆண்டுக்ளுக்குப் பிறகும், சைஃப் ஹசன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றுள்ளமை இங்;கு குறிப்பிடத்தக்கது.

இதில் நூருல் ஹசன், 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இறுதியாக விளையாடியிருந்தார். 31 வயதான இவர், 2024-25 பருவகாலத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக், தேசிய கிரிக்கெட் லீக் மற்றும் குளோபல் சுப்பர் லீக் ஆகியவற்றில் 513 ஓட்டங்களை 132.90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்து சிறப்பாக விளையாடினார். குல்னாவைச் சேர்ந்த நூருல், கடந்த ஆண்டு ரங்க்பூர் ரைடர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு அந்த அணிக்கு முதல் தடவையாக சம்பியன் பட்டத்தையும் வென்று கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனிடையே, கடந்த மாதம் டாக்காவில் பாகிஸ்தானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றிருந்த அனுபவ சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ், முன்னாள் தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ மற்றும் மொஹமட் நயிம் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், பந்துவீச்சு வரிசையில் முஸ்தபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹமட் மற்றும் சொரிஃபுல் இஸ்லாம் ஆகிய அனுபவமிக்க வீரர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளனர். துடுப்பாட்டத்தை பொறுத்தவரை அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்ற ஜாக்கர் அலி, இம்முறை ஆசியக் கிண்ணத்திலும் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, சௌம்ய சர்கார், தன்வீர் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்முத் ஆகியோர் ஆசியக் கிண்ணத் தொடருக்ககான காத்திருப்பு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை ஆசியக் கிண்ணத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, தமது முதல் போட்டியில் செப்டம்பர் 11ஆம் திகதி அபுதாபியில் ஹொங்காங் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். அடுத்த இரண்டு போட்டிகளில், செப்டம்பர் 13 இலங்கையுடனும், செப்டம்பர் 16 ஆப்கானிஸ்தான் அணியுடனும் அதே மைதானத்தில் விளையாடுவார்கள்.

ஆசியக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணி விபரம்:

லிட்டன் தாஸ் (தலைவர்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அஹமட், முஸ்தபிசூர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகஹமட், ஷொரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதீன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<