அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
சஞ்சனா காவிந்தியின் அரைச் சதம், சமோதி ப்ரபோதா மற்றும் அசேனி தலகுணே ஆகிய இருவரினதும் அபார பந்துவீச்சு என்பன இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணியின் அழைப்பின் பேரில் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் சஞ்சனா காவிந்தி அரைச் சதம் கடந்து 62 ஓட்டங்களையும், அணித் தலைவி மனுதி நாணயக்கார ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், விமோக்ஷா பாலசூரிய 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணியின் பந்துவீச்சில் அவா ட்ரூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
>>மனுதி தலைமையிலான இலங்கை 19 வயதின்கீழ் மகளிர் அணி அறிவிப்பு
இதனையடுத்து 134 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. அந்த அணிக்காக எமிலி பவல் 39 ஓட்டங்களையும், ஷிலோ ஜூலியன் 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் 16 வயது இடதுகை சுழல்பந்து வீச்சாளரான சமோதி ப்ரபோதா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அசேனி தலகுணே 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் T20 தொடரில் இலங்கை வீராங்கனைகள் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக சஞ்சனா காவிந்த தெரிவாகினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது T20 போட்டி நாளை (21) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 மகளிர் அணி – 133/3 (20) சஞ்சனாகவிந்தி 62, மனுதிநாணயக்கார 28*, விமோக்ஷாபாலசூரிய 21, அவட்ரூரி 2/23
அவுஸ்திரேலிய U19 மகளிர் அணி – 108/8 (20) எமிலிபவல் 39, ஷிலோஜூலியன்28, சாமோடிபிரபோதா 3/16, அசெனிதலகுனே 3/25
முடிவு – இலங்கை U19 மகளிர் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில்வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<