சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் உஸ்மான் கவாஜாவின் அசத்தல் இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலிய அணி பலம் பெற்றுள்ளது.
காலி சர்வதேச மைதானத்தில் நேற்று (29) தொடக்கம் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியானது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்து, முதல் நாள் ஆட்டநிறைவில் 330 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காதிருந்த உஸ்மான் கவாஜா 147 ஓட்டங்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 104 ஓட்டங்களுடனும் காணப்பட்டனர்.
இன்று (30) இரண்டாம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணியானது 400 ஓட்டங்களை கடந்த நிலையில் ஸ்மித்தின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. ஸ்மித் தன்னுடைய 35ஆவது டெஸ்ட் சதத்துடன் 12 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 141 ஓட்டங்கள் பெற்றார்.
அதன் பின்னர் புதிய வீரராக வந்த ஜோஷ் இங்லீஷ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் அவுஸ்திரேலியத் தரப்பினைப் பலப்படுத்தினர். இந்த வீரர்களில் கவாஜா இரட்டைச்சதம் விளாச, ஜோஸ் இங்லீஷ் அதிரடி சதம் பெற்றார். இரண்டு வீரர்களினதும் ஆட்டத்தோடு அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவேளையில் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை 154 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களுடன் நிறுத்தியது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பாக உஸ்மான் கவாஜா தன்னுடைய கன்னி இரட்டைச் சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 232 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மறுமுனையில் இங்லீஷ் 94 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 10 பௌண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கைப் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய மற்றும் ஜெப்ரி வன்டர்செய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தொடங்கிய இலங்கை அணியானது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் காணப்படுகின்றது. இலங்கை அணிக்கு நம்பிக்க தர எதிர்பார்க்கும் வீரர்களில் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 09 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.