ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

96
ICC

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையில் நடைபெற்ற இருதரப்பு தொடரின் முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அஸ்டன் அகாரின் ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்று (21) ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்றது. 

முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்தார் இந்திய சுழல் பந்துவீச்சாளர்

இந்திய கிரிக்கெட் அணியின்…….

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான பைட் வென் பில்ஜொன் முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். மேலும் நீண்ட இடைவெளியின் பின்னர் குழாமுக்கு திரும்பிய முன்னாள் அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் 11 மாதங்களின் பின்னர் டி20 சர்வதேச போட்டியில் விளையாடினார். 

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் இரண்டாவது பந்திலேயே வீழ்த்தப்பட்டது. முதல் பந்தில் பௌண்டரி விளாசிய டேவிட் வோர்னர் 4 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் ஆரேன் பிஞ்சுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் சிறந்த இணைப்பாட்டத்தை பகிந்து கொண்டார்.

முதல் பவர்-பிளே (power play) ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் 1 சிக்ஸர், 6 பௌண்டரிகளுடன் 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த மெத்யூ வேட் 12ஆவது ஓவரில் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த ஸ்டீவ் ஸ்மித் 1 சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 45 ஓட்டங்களை பெற்று அடுத்த ஓவரின் முதல் பந்தாக வீசப்பட்ட வைட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 

இருவரும் இணைப்பாட்டமாக அரைச்சதம் பூர்த்தி செய்த வேளையில்  18ஆவது ஓவரில் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மீண்டும் அடுத்த ஓவரில் 19 ஓட்டங்களுடன் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். இறுதியில் அஸ்டன் அகார் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை குவித்தது. 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டெய்ன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தப்ரிஸ் ஷம்ஷி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் லுங்கி ங்கிடி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

197 என்ற கடின வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. மூன்றாவது பந்தில் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் குயின்டன் டி கொக் வெறும் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். அதனை தொடர்ந்து 4ஆவது ஓவரில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரைஸ் வென் டர் டைஸன் 6 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். 

அதனை தொடர்ந்தும் மீண்டும் 6ஆவது ஓவரில் தென்னாபிரிக்க அணியின் மூன்றாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. ஜொன் ஜொன் ஸ்மட்ஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 7ஆவது ஓவரில் தென்னாபிரிக்க அணியின் நான்காவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. 

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும்….

அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது. இந்நிலையில் அஸ்டன் அகார் வீசிய 8ஆவது ஓவரில் தென்னாபிரிக்க அணியின் மூன்று விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டதுடன், டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அஸ்டன் அகார் 2ஆவது அவுஸ்திரேலிய வீரராக ஹெட்ரிக் விக்கெட் சாதனையை பதிவு செய்தார். 

பாப் டு ப்ளெஸிஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்தியே இவ்வாறு பிரட் லீக்கு அடுத்தாக இரண்டாவது அவுஸ்திரேலிய வீரராக சாதனை படைத்தார். கன்னி டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய பைட் வென் பில்ஜொன் 16 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 12 ஓவர்கள் நிறைவில் 77 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தது. 

பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் அணியின் இறுதி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட தென்னாபிரிக்க அணி 14.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது. 

அவுஸ்திரேலிய அணியின் இவ்வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் அவ்வணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஸ்டன் அகார் தெரிவானார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி நாளை (23) போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது. 

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில்…..

போட்டியின் சுருக்கம்.

அவுஸ்திரேலியா – 196/6 (20) – ஸ்டீவ் ஸ்மித் 45 (32), ஆரேன் பிஞ்ச் 42 (27), அலெக்ஸ் கேரி 27 (22), டேல் ஸ்டெய்ன் 2/31 (4), தப்ரிஸ் ஷம்ஷி 2/31 (4)

தென்னாபிரிக்கா – 89 (14.3) – பாப் டு ப்ளஸிஸ் 24 (22), ககிஸோ ரபாடா 22 (19), அஸ்டன் அகார் 5/24 (4), அடம் ஸம்பா 2/9 (2.3), பெட் கம்மிண்ஸ் 2/13 (2)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<