இலங்கைக்கு எதிரான ஆஸி. T20i குழாம் அறிவிப்பு

52

தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் ஆடவுள்ளது. 

இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள 14 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய T20i வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணிக்கு வர 10 வருடங்கள் காத்திருந்தேன் – பானுக்க ராஜபக்ஷ

இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு ……..

அறிவிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய குழாத்தில் நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான பென் மெக்டெர்மட் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். 

கடைசியாக 2018ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக T20i போட்டிகளில் ஆடிய பென் மெக்டெர்மட், கடைசியாக இடம்பெற்ற அவுஸ்திரேலியாவின் உள்ளூர் T20 தொடரான பிக் பேஷ் லீக்கில் சிறப்பாக செயற்பட்டதனை அடுத்தே ஆஸி அணியில் இடம்பெற்றிருக்கின்றார். 

அவுஸ்திரேலிய T20i குழாத்தில் முன்னணி துடுப்பாட்டவீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோரும் மீள அழைக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை, ஆஸி அணியில் சகலதுறை வீரரான மார்கஸ் ஸ்டோயினிஸிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

மார்கஸ் ஸ்டோயினிஸ் நடைபெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு பிரகாசிக்காது போயிருந்ததுடன், அடிக்கடி உபாதைகளையும் எதிர் கொண்டிருந்தார். இவ்வாறான காரணங்களினாலேயே, ஆஸி. அணியில் ஸ்டொயினிஸ் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.   

அவுஸ்திரேலிய அணிக்காக T20 சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரராக இருக்கும் டேவிட் வோர்னர், இறுதியாக நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். T20 தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். இதேவேளை, ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக 2016ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலிய அணிக்காக T20i போட்டிகளில் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையுடனான T20 தொடரில் அஸ்டன் டேர்னர் ஆடுவதில் சந்தேகம்

தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ……….

இலங்கை அணிக்கு எதிரான T20i தொடரில் ஆஸி. அணியின் துடுப்பாட்டமானது டேவிட் வோர்னர். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அணித்தலைவர் பின்ச் ஆகியோரினால் வலுப்படுத்தப்படுகின்றது. 

மறுமுனையில் பந்துவீச்சினை பொறுத்தவரையில் ஆஸி. அணியின் வேகப்புயலான மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் உடன் இணைந்து இலங்கை அணிக்கு நெருக்கடிதரவுள்ளார். இதேநேரம், அடம் ஷம்பா ஆஸி அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளராக காணப்படுகின்றார். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், கிளென் மெக்ஸ்வெல் மற்றும் அஸ்டன் டேர்னர் ஆகியோர் சகலதுறை வீரர்களாக இலங்கை அணிக்கு எதிராக செயற்படவிருக்கின்றனர். முன்னதாக, அஸ்டன் டேர்னர் காயம் காரணமாக ஆஸி. அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிரான அவுஸ்திரேலிய T20i அணி பற்றி, அதன் தலைமை தேர்வாளரான ட்ரெவர் ஹோன்ஸ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

”அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு T20 உலகக் கிண்ணத்தை நடாத்த இன்னும் ஒருவருடம் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. எனவே, நாம் அதனை கருத்திற்கொண்டே இலங்கை அணிக்கு எதிரான இந்த அணியினை தெரிவு செய்திருக்கின்றோம்.” 

நாம் இரண்டு போட்டிகளிலும் சிறந்த கிரிக்கெட் ஆடவில்லை – சர்பராஸ் அஹமட்

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது T20 ………

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20i தொடரின் முதல் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி அடிலைட் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இதன் பின்னர் இம்மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது T20i போட்டிக்காக இரண்டு அணிகளும் பிரிஸ்பேன் நகருக்கு செல்லவிருக்கின்றன. தொடர்ந்து இரண்டு அணிகளும் விளையாடும் கடைசி T20 போட்டி மெல்பர்ன் நகரில் நவம்பர் மாதம் 01ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.  

இலங்கை அணியுடனான T20 தொடரினை நிறைவு செய்த பின்னர் பாகிஸ்தான் அணியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தமது சொந்த மண்ணில் வைத்து T20i போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

அவுஸ்திரேலிய T20i குழாம்  

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), அஸ்டன் ஏகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், கிளேன் மெக்ஸ்வெல், பென் மெக்டெர்மட், கேன் ரிச்சரட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டேன்லேக், மிச்செல் ஸ்டார்க், அஸ்டன் டேனர், அன்ட்ரூ டை, டேவிட் வோர்னர், அடம் ஷம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<