IPL இற்காக ஆசிய கிண்ணம் இரத்து செய்யப்படாது: பாகிஸ்தான்

479

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை நடத்துவதற்காக இவ்வருடம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எந்தக் காரணத்துக்காகவும் இரத்து செய்யப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் ஒருதடவை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் அக்டோபர்நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடர் இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் குறித்த காலப்பகுதியில் .பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.  

ஆசிய கிண்ண தொடர் இலங்கையில்

எனினும், T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.  

இந்த சூழ்நிலையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், ஐபிஎல் போட்டிக்குப் பதிலாக ஆசிய கோப்பை இரத்து செய்யப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து வசீம் கான் கூறுகையில், ”ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 2ஆம் திகதி நாடு திரும்பிவிடும். ஆகவே, செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபரில் எங்களால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்த முடியும்

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவு இல்லை என்பதால் அங்கு நடத்தப்படலாம். அவர்கள் முடியாது என்றால், ஐக்கிய அரபு இராட்சியம் எப்போதுமே தயாராக இருக்கிறது” என தெரிவித்தார்.

முன்னதாக இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போது இலங்கையில் ஆசிய கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தியா தரப்பில் அவ்வாறான எந்தவொரு உடன்பாட்டுக்கும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க