துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

1474
Asian Cricket Council Facebook
Asian Cricket Council Facebook

பங்களாதேஷில் நடைபெற்று வருகின்ற இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை 31 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளதுடன், இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்குபற்றியிருந்த இந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின், முதல் அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை தோற்கடித்து இந்தியாவின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் ஆடும் முதல் அணியாக தெரிவாகியிருந்ததது.

எந்த தோல்வியுமின்றி இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதியில் இலங்கை

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆடும்  இரண்டாவது அணியை தெரிவு செய்யும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை –  நடப்பு சம்பியன் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் மோதின.

டாக்காவின் செரே பங்களா மைதானத்தில் இன்று (05) ஆரம்பமாகியிருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் தரப்பு தலைவர், றஹ்மானுல்லாஹ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணிக்கு வழங்கினார்.

இதன்படி, முதலில் துடுப்பாட வந்த இலங்கையின் இளம் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நவோத் பராணவிதான, நிஷான் மதுஷ்க ஆகியோர் ஓட்டமேதுமின்றி ஏமாற்றினர். இதனை அடுத்து வந்த, கமில் மிஷார மற்றும் கல்ஹார சேனாரத்ன போன்ற வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். இதனால், இலங்கை இளையோர் அணி 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியின் நுவனிது பெர்னாந்து பொறுமையான முறையில் துடுப்பாடி சதம் கடந்தார்.  பெர்னாந்துவின் சத உதவியோடு சரிவு ஒன்றில் இருந்து மீண்ட இலங்கையின் இளையோர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை குவித்தது.

இலங்கையின் இளம் வீரர்களின் துடுப்பாட்டத்தில், சதம் பூர்த்தி செய்த நுவனிது பெர்னாந்து 129 பந்துகளுக்கு  3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பாக அப்துல் ரஹ்மான், 42 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 210 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலக்கை நோக்கி முன்னேறிய போதிலும், மாத்தறை புனித செர்வஷியஸ் கல்லூரி அணி வீரர் சஷிக்க துல்ஷானின் சுழலில் பின்னர் தடுமாறத் தொடங்கியது. அதன்படி, ஒரு கட்டத்தில் 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து காணப்பட்ட ஆப்கானின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி 48.3 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.

ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றிகளை பெற்றுத்தந்த திசரவுக்கு வாய்ப்பில்லை

ஆப்கானிஸ்தான் தரப்பு துடுப்பாட்டத்தில் அதிகூடிய தனிநபர் ஓட்ட  எண்ணிக்கையாக 46 ஓட்டங்களை குவித்த அவ்வணியின் தலைவர் றஹ்மனுல்லாஹ் பெற, இஜாஸ் அஹ்மட் 37 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவ்வெற்றியோடு கடந்த ஆண்டு இடம்பெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்களான ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை இம்முறை அரையிறுதிப் போட்டியோடு தொடரை விட்டு வெளியேறியது.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக, சஷிக்க துல்ஷான் 24 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், கல்ஹார சேனாரத்ன மற்றும் நவோத் பராணவிதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்து வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கையின் இளம் வீரர் நுவனிது பெர்னாந்து தெரிவு செய்யப்பட்டதோடு, இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) எதிர்கொள்கின்றது.

ஸ்கோர் விபரம்

முடிவு  – இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க