ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிகபடியான வெப்பநிலை இருப்பதன் காரணமாக போட்டி நடைபெறும் நேரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
17ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குழு A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குழு B பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், ஆசியக் கிரிக்கெட் தொடர் ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின் படி ஐக்கிய அரபு இராச்சியம் நேரடிப்படி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்தப் போட்டிகள் இலங்கை நேரப்படி மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால், போட்டி நடைபெற இருக்கும் துபாய் மற்றும் அபுதாபியில் தற்போது 40 பாகைக்கும் அதிகமாக வெப்பம் நிலவுவதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் சபைகளும் போட்டி நேரங்களை மாற்றக் கோரியிருந்தன. ஒளிபரப்பு நிறுவனங்களிடமும் இதுகுறித்துப் பேசப்பட்டது.
இதன்படி, இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளை அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக T20 போட்டிகள் மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11.00 மணிக்குள் முடிவடையும், ஆனால், தற்சமயம் இரவு 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகுவதால் நள்ளிரவு வரை போட்டிகள் நடைபெறும் என்பதால் அது ரசிகர்களை சற்று சோர்வடைய செய்துள்ளது.
இதனிடையே, செப்டம்பர் 15ஆம் திகதி அபுதாபியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகள் இடையான போட்டி மட்டும் ஏற்கனவே அறிவித்தபடி மாலை 4.00 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 5.30) ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அன்றைய தினம் 2 போட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<