ஹெட்ரிக் சாதனையுடன் தரவரிசையில் முதல் ஐந்திற்குள் புகுந்த அஸ்டன் அகார்

102
Fox Sports

தென்னாபிரிக்க அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் மொத்தமாக 8 விக்கெட்டுக்களை வீழ்த்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்டன் அகார் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் புகுந்துள்ளார்.  

அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களிலும் ஆடிவருகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நேற்று (26) நிறைவுக்குவந்த நிலையில் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 

தென்னாபிரிக்க மண்ணில் டி20 தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவுக்கு எதிரான………….

இந்நிலையில் குறித்த டி20 சர்வதேச தொடர் நிறைவுக்குவந்ததுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டி20 வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (27) வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த தொடரில் பிரகாசித்த தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பிரகாசிக்க தவறிய வீரர்கள் இருந்த நிலைகளை இழந்துள்ளனர். 

இரு அணிகளுக்குமிடையிலான முதல் டி20 சர்வதேச போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறுவதற்கு பந்துவீச்சில் ஹெட்ரிக் சாதனையுடன் 5 விக்கெட்டுக்களையும் தொடரில் மொத்தமாக 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி முக்கிய புள்ளியாக திகழ்ந்த அஸ்டன் அகார் 6 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (712) நான்காவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

இதேவேளை, தொடரில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸம்பா ஒரு நிலை உயர்ந்து 713 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாவது நிலைக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் தொடரில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி தென்னாபிரிக்க அணிக்கு சுழற்பந்துவீச்சில் பங்களித்த தப்ரிஸ் ஷம்ஷி 3 நிலைகள் உயர்ந்து 681 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் அணியில் ஒரு மாற்றத்துடன் T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள்…..

வெளியிடப்பட்டுள்ள டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையின் படி மூன்று, நான்கு மற்றும் ஐந்தாமிடங்களை குறித்த தொடரில் விளையாடிய அடம் ஸம்பா, அஸ்டன் அகார், தப்ரிஸ் ஷம்ஷி ஆகியோர் பிடித்துள்ளமை விசேடமாக குறிப்பிடத்தக்கது. 

மேலும் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் (ஆஸி.) 11ஆவது நிலைக்கும், பெட் கம்மிண்ஸ் (ஆஸி.) 17ஆவது நிலைக்கும், மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.) 24ஆவது நிலைக்கும், லுங்கி ங்கிடி (தெ.ஆ) 73ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர். டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் 749 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். 

தொடரில் இரண்டு அரைச்சதங்களுடன் மொத்தமாக 128 ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 7 நிலைகள் உயர்ந்து 581 தரவரிசை புள்ளிகளுடன் 18ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் தொடரில் ஒரு அரைச்சதத்துடன் மொத்தமாக 111 ஓட்டங்களை குவித்து தொடர் ஆட்டநாயகன் விருதுவென்ற ஆஸி. அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 820 தரவரிசை புள்ளிகளை பெற்று தொடர்ந்தும் மூன்றாமிடத்தில் நீடிக்கின்றார். 

கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் போட்டித்தடைக்கு முகங்கொடுத்து தடையின் பின்னர் ஆறு டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி நிறைவுபெற்ற தொடரில் மூன்றாவது அதிகபடியான ஓட்டங்களாக 104 ஓட்டங்களை குவித்த ஸ்டீவ் ஸ்மித் 25 நிலைகள் உயர்ந்து 463 தரவரிசை புள்ளிகளுடன் கட்டார் அணி வீரர் கம்ரான் கானுடன் இணைந்து 53ஆவது நிலையில் இடம்பெற்றுள்ளார். 

தொடரில் ஒரு அரைச்சதத்துடன் தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அணித்தலைவர் குயின்டன் டி கொக் 13ஆவது நிலைக்கும், ரைஸ் வென் டர் டைஸன் (தெ.ஆ) 25ஆவது நிலைக்கும், இறுதி டி20 போட்டியில் மாத்திரம் விளையாடிய ஹென்ரிச் கிளாஸன் 86ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர். 

டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் 879 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<