புதிய வீரர்கள், கொவிட் – 19 தொற்று; தென்னாபிரிக்க டெஸ்ட் அணியில் குழப்பம்?

ICC World Test Championship

163
Image Credits - Getty Images

தென்னாபிரிக்க அணி மூன்று மேலதிக வீரர்களை இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தமது டெஸ்ட் குழாத்திற்குள் இணைத்திருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அந்நாட்டின் வீரர் குழாத்தில் காணப்பட்ட இரண்டு வீரர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

>>இலங்கையுடன் மோதும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து குழாம்கள் அறிவிப்பு<<

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை (18) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் அந்நாட்டின் டெஸ்ட் குழாத்திற்குள், புதுமுக துடுப்பாட்ட வீரர் வான் டொன்டர், பந்துவீச்சாளர் லுத்தோ சிபம்லா மற்றும் சகலதுறை வீரர் ட்வைன் ப்ரெடோரியஸ் ஆகியோர் உள்வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வீரர்களில் புதுமுக துடுப்பாட்ட வீரரான வான் டொன்டர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி, தான் விளையாடிய கடந்த 10 போட்டிகளிலும் மொத்தமாக 604 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதேநேரம், உபாதையில் இருந்து மீண்ட ட்வைன் ப்ரெடோரியஸ், லுத்தோ சிபம்லா ஆகியோரும் தமது அண்மைய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். 

முன்னர் அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் 

குயிண்டன் டி கொக் (தலைவர்), தெம்பா பௌவுமா, எய்டன் மர்க்கரம், பெப் டு ப்ளெசிஸ், பியூரன் ஹென்ரிக்ஸ், டீன் எல்கர், கேஷவ் மஹராஜ்,  லுங்கி என்கிடி, ரஸ்ஸி வென் டெர் டஸன், சரேல் எர்வி, என்ரிச் நோக்கியா, க்ளெண்டன் மேட், வியான் முல்டர், கீகன் பெடர்சன், கைல் வெர்ரெய்ன்

அதேநேரம், புதிய வீரர்கள் உள்வாங்கப்பட்ட நிலையிலையே தென்னாபிரிக்க டெஸ்ட் அணியில் காணப்படுகின்ற வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

>>Video – “தென்னாபிரிக்க அணியை வீழ்த்துவது இலகுவான விடயமல்ல” – திமுத் கருணாரத்ன!<<

இந்த வீரர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது. 

தற்போது குறிப்பிட்ட வீரர்கள் இருவரும் தென்னாபிரிக்க டெஸ்ட் குழாத்தின் பயிற்சி முகாமில் இருந்து நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு தொடர்ச்சியான முறையில் அவதானிக்கப்பட்டு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகளையும் பெற்றுவருகின்றனர்.

மறுமுனையில், இந்த வீரர்கள் இருவரும் தென்னாபிரிக்க டெஸ்ட் குழாத்தில் இருக்கும் ஏனைய வீரர்கள் எவருடனும் தொடர்புகளை பேணியிருக்கவில்லை என அந்த நாட்டு கிரிக்கெட் சபை உறுதி செய்திருக்கின்றது. எனினும், இந்த வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

அதோடு, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான வீரர்களை தவிர்த்து தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சிகளை தொடரவிருக்கின்றது. 

இதேவேளை, இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மோதுகின்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி செஞ்சூரியன் நகரில் ஆரம்பமாகவிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<