“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா

123

போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஆர்ஜன்டீன மக்கள் அவரை விரும்புவதில்லை என்று அவரது ஜுவான்டஸ் அணியின் சக வீரர் பவுலோ டிபாலா கூறியுள்ளார்.   

லியோனல் மெஸ்ஸியின் சொந்த நாடான ஆர்ஜன்டீயானவில் ரொனால்டோ அதிக பிரபலம் இல்லை என்றும் அவரை அந்நாட்டு மக்கள் விரும்புவதில்லை என்றும் ரொனால்டோவிடம் டிபாலா நேரடியாக கூறியுள்ளார்.  

கால்பந்து உலகில் சிறந்த வீரர்களாக ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி தனது நிலையை உறுதிசெய்துகொண்டவர்களாவர்

பாலோ டிபாலாவுக்கு கொரோனா தொற்று

இத்தாலியின் முன்னணி கால்பந்து…..

ரொனால்டோ முன்னர் ஆடிய ரியல் மெட்ரிட் மற்றும் மெஸ்ஸியின் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான போட்டி கால்பந்து வரலாற்றில் எப்போதும் பரபரப்புக் கொண்டதாகவும் எதிர்பார்ப்புடையதாகவும் உள்ளது. இந்தப் போட்டிகள் இந்த இரு வீரர்களும் தமது திறமையை பரஸ்பரம் வெளிப்படுத்தும் ஆட்டங்களாகவும் இருந்து வந்தன

ரொனால்டோ 2018 ஆம் ஆண்டு லா லிகா அணியான ரியல் மெட்ரிட்டில் இருந்து இத்தாலியின் ஜுவான்டஸ் அணிக்கு மாறியபோதும் இந்த இரு நட்சத்திர வீரர்கள் தொடர்பான விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

இந்நிலையில் ரொனால்டோவின் சக வீரரான ஆர்ஜன்டீன தேசிய அணியைச் சேர்ந்த டிபாலா இந்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ரொனால்டோவின் திறமை பாராட்டத்தக்கது என்று தாம் உணர்ந்தபோதும், தமது நாட்டவர்கள் ரொனால்டோவை விரும்புவதில்லை என்று டிபாலா கூறியுள்ளார்.  

கிறிஸ்யானோ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்ற உங்களது உருவத்தின் காரணமாக ஆர்ஜன்டீனர்களாகி நாம் உங்களை வெறுக்கிறோம். நீங்கள் அந்த எண்ணத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைப் பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன், என்று நான் அவரிடம் கூறினேன் என ஆர்ஜன்டீன கால்பந்து சம்மேளனத்துடனான பேட்டி ஒன்றில் டிபாலா குறிப்பிட்டார்.  

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவருடனும் ஆடிய ஒருசில வீரர்களில் டிபாலாவும் ஒருவராவார். இந்த இரு வீரர்களுடனும் முன்களத்தில் ஆடும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றுள்ளார்

எனினும் ஆர்ஜன்டீன அணி சார்பில் மெஸ்ஸி உடன் இணைந்து விளையாடுவது கடினமாக இருப்பதாக டிபாலா கடந்த ஆண்டு கருத்துக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த இருவரும் மைதானத்தில் ஒரே நிலையில் ஆடும் சூழலிலேயே இந்த கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

இருவரும் தமது நிலையில் பொருந்திச் செல்வது பற்றி மெஸ்ஸியுடன் ஆட்ட மூலோபாயங்கள் தொடர்பில் தாம் பேசியதாகவும் டிபாலா தெரிவித்திருந்தார்

எனது சக வீரரை நான் வேண்டும் என்றே விமர்சிக்கவில்லை, ஆட்டத்தில் முன்னேற்றம் ஒன்றை ஏற்படுத்தவே விரும்பினேன் என்று டிபாலா தெரிவித்தார்.

இருவரும் ஒரே மாதிரியான போட்டி மூலோபாயத்தை கொண்டிருப்பதால் லியோ (மெஸ்ஸி) உடன் நான் அது பற்றி பேசினேன். உலகக் கிண்ணம் அல்லது கோப்ப அமெரிக்க போட்டிகளில் நான் பல நிமிடங்கள் இது பற்றி பேசியபோதும், பயிற்சியாளர்களின் முடிவை நான் எப்போதும் மதிக்கிறேன். ஏனென்றால் ஆர்ஜன்டீனா எனக்கு முக்கியமானதாகும் என்று டிபாலா குறிப்பிட்டார்.    

அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான டிபாலா, அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் தமக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்ட பின் அதிகம் பயப்பட்டதாக தெரிவித்தார்.

நான் அதிகம் இருமினேன், உறங்கச் செல்லும்போது களைப்பாக இருந்தது, காய்ச்சல் வந்ததை உணர்ந்தேன். அப்படி இருப்பது கடினமாக இருந்தது. அமைதியாக இருக்க முயன்றேன். ஜுவான்டஸ் மருத்துவரிடம் பேசினேன் என்று தமது அனுபவத்தை கூறினார் டிபாலா.  

கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி

கால்பந்து உலகின் பெரும்……

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. இந்த நோய்த் தொற்றினால் தாமும் தனது காதலியும் சந்தித்த மோசமான அனுபவங்கள் பற்றியும் டிபாலா கூறியுள்ளார்

ஆரம்பத்தில் மோசமான நோய் அறிகுறிகள் என்னிடம் தோன்ற ஆரம்பித்தது. பயிற்சி பெறும்போது விரைவாக களைப்படைய ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே மூச்சுவிட தணறினேன். எனது உடல் நிலை சரியாக இல்லை என்று உணர ஆரம்பித்தேன். கழகத்தின் மூலம் சோதனை செய்த பின் எனக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என்று டிபாலா கூறினார்.  

அதிர்ஷ்டவசமாக தற்போது எந்த நோய் அறிகுறியும் வெளிப்படவில்லை. நல்ல உடல் நிலையை உணர்கிறேன் என்றும் அவர் கூறினார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<