அசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு

2544

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளரந்து வரும் அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் அணிக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (11) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி அசேல குணரத்னவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக் அணித்தலைவர்  டோனி சி சொர்சி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தார். இந்த போட்டியில் இலங்கை அணி தினேஷ் சந்திமால், அசித பெர்னாண்டோ மற்றும் ஷம்மு அஷானுக்குப் பதிலாக சரித் அசலங்க, ஜெஹான் டேனியல் மற்றும் அமில அபோன்சோ ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தனர்.

திமுத், சதீர ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினால் இலகு வெற்றி பெற்ற இலங்கைத் தரப்பு

அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜிவேசன் பிள்ளை மற்றும் டோனி சி சொர்சி ஜோடி 41 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அணித்தலைவர் சொர்சி 33 ஓட்டங்களுக்கு அசேல குணரத்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முற்பட்ட ஜிவேசன் பிள்ளை 10 ஓட்டங்களுடன் ஷெஹான் மதுஷங்கவின் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய மெதிவ் பீரிட்ஸ்கி மற்றும் ரையன் ரிக்கல்டன் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு மத்திய வரிசையில் நம்பிக்கை கொடுத்த ரையன் ரிக்கல்டன் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிசெபாங் டிதோல், நிஷான் பீரிஸ் வீசிய அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரால் நான்கு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்ததது.

தொடர்ந்து மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய கங்கிசோ ரபுலானா 4 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஈதன் பொஸ்ச் 6 ஓட்டங்களுடன் ஜெப்ரி வெண்டர்சேயின் பந்துவீச்சில் ஜெஹான் டேனியலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

எனவே, தென்னாபிரிக்க அணி 24 ஓட்டங்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், 7ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மெதிவ் பீரிட்ஸ்கி மற்றும் த மஹ்லொக்வனா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு நம்பிக்கை கொடுக்க, அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மத்திய வரிசையில் வந்த மெதிவ் பீரிட்ஸ்கி 103 பந்துகளுக்கு முகங்கொடுத்து 97 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு சவால் கொடுக்கும் ஓட்டங்களை பெற உதவினார். குறிப்பாக அவர் மஹ்லொக்வானாவுடன் இணைந்து 7 ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். மஹ்லொக்வானா 41 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் சகலதுறை வீரர் அசேல குணரத்ன 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நிஷான் பீரிஸ் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேல, வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம்

பின்னர், 268 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு திமுத் கருணாரத்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுக்க தவறிவிட்டனர்.

இதில் இலங்கை அணி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை சதீர சமரவிக்ரம முதல் விக்கெட்டாக மஹ்லெக்வானாவின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு வெளியேறினார். அவரால் 25 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

மறுமுனையிவ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருந்த திமுத் கருணாரத்ன, ஈதன் பொஸ்ச் வீசிய அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒரு கட்டத்தில் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. எனினும், மத்திய வரிசையில் வந்த மூன்று வீரர்களும் அடுத்தடுத்து அரைச்சதங்களைக் குவித்து இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதில் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்க 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். 61 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 54 ஓட்டங்களை பெற்றிருந்த கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சரித் அசலங்க மற்றும் அசேல குணரத்ன ஜோடி, இலங்கை வளர்ந்து வரும் அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றது. இருவரும் 32 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், சரித் அசலங்க 69 ஓட்டங்களுடன் நந்த்ரே பெர்கரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் போட்டியைப் போல இலங்கை அணிக்காக சகலதுறையில் பிரகாசித்த, அசேல குணரத்ன 64 பந்துகளுக்கு முகங்கொடுத்து, 8 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் 5 பந்துவீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன்படி 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை வளர்ந்து வரும் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க