2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளை நடத்த இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆகியவை இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான மைதானங்களைத் தெரிவு செய்யும் பணியில் சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC) ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியாவில் அரையிறுதிப் போட்டிகளை நடத்த அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆகிய மைதானங்கள் முதன்மையாகப் பரிசீலிக்கப்படுகின்றன.
எனினும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள், தொடரின் அரையிறுதிப் போட்டிக்கோ அல்லது இறுதிப் போட்டிக்கோ பாகிஸ்தான் அல்லது இலங்கை தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் மாற்றமடைய முடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒன்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்த அரையிறுதிப் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள மைதானத்தில் நடாத்தப்படும். அவ்வாறு இரு நாடுகளும் தகுதி பெறாவிட்டால், இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் இந்தியாவில் நடத்தப்படும்.
அதேபோன்று, இறுதிப் போட்டிக்கான மைதானமும் எந்தெந்த அணிகள் இறுதிக்குள் நுழைகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டியானது கொழும்பில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் தகுதி பெறாவிட்டால், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
2026 T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகளுக்காக அஹமதாபாத், கொல்கத்தா தவிர மும்பை, டெல்லி, சென்னை ஆகிய நகரங்களும் இந்தியாவில் போட்டிகளை நடத்தத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய மைதானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த T20 உலகக் கிண்ணத் தொடர், அடுத்த ஆண்டு (2026) பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. விரைவில் தொடரின் முழுப் போட்டி அட்டவணை மற்றும் அணிகளின் பிரிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஐ.சி.சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















