ICC T20 உலகக் கிண்ண ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு; ரஷீட் ராஜினாமா

ICC T20 World 2021

414

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் குழாத்தில், அனுபவ வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தலைவராக நியமிக்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான், குழாம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்கா குழாம் அறிவிப்பு

உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தெரிவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக, ரஷீட் கான் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்காரணமாக, ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக சகலதுறை வீரர் மொஹமட் நபி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் குழாத்தில் அனுபவ வீரர்களான ஹமிட் ஹஸன், ஷபூர் ஷட்ரான், டவ்ளத் ஷட்ரான் மற்றும் மொஹமட் சேஷார்ட் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஹமிட் ஹஸன் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர், ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடவில்லை. அத்துடன், இவர் இறுதியாக 2016ம் ஆண்டு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் விதிமுறையை மீறியதாக, ஒருவருட தடைக்கு முகங்கொடுத்திருந்த மொஹமட் சேஷார்ட், மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன், ஷபூர் ஷட்ரான் மற்றும் டவ்ளத் ஷட்ரான் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர், சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.

இதேவேளை, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தோல்வி குறித்து விசாரணைகளுக்கு முகங்கொடுத்திருந்த ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் அஸ்கர் ஆப்கான், விசாரணைகளை தொடர்ந்து T20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆப்கானிஸ்தான் குழாம்

மொஹமட் நபி (தலைவர்), ரஷீட் கான், ரஹமதுல்லாஹ் குர்பாஸ், ஹசரதுல்லாஹ் ஷஷாய், உஸ்மான் கஹானி, அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லாஹ் ஷட்ரான், ஹஷமதுல்லாஹ் ஷஹிடி, மொஹமட் சேஷார்ட், முிஜிப் உர் ரஹ்மான், கரீம் ஜனட், குலாபுதீன் நயீப், நவீன் ஹுல் ஹக், ஹமிட் ஹஸன், ஷரபுதீன் அஸ்ரப், டவ்ளத் ஷட்ரான், ஷபூர் ஷட்ரான், குவைஸ் அஹ்மட்

மேலதிக வீரர்கள் – அப்ஷர் ஷஷாய், பரிட் அஹ்மட் மலிக்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க..