இலங்கையை இலகுவாக வீழ்த்திய சிரியா

114
Sri Lanka v Syria - AFC U23 Asian Cup Uzbekistan 2022 Qualifiers
Sri Lanka v Syria - AFC U23 Asian Cup Uzbekistan 2022 Qualifiers

2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரின் A குழுவுக்கான தமது முதல் போட்டியில் இலங்கை அணியை சிரிய வீரர்கள் 5-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியுள்ளனர்.  

 இலங்கை முதல் பதினொருவர்

கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள சுஹைம் பின் ஹமாட் அரங்கில் இந்தப் போட்டி ஆரம்பமாகிய நிமிடத்திலேயே சிரிய வீரர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி கோலாக்கப்பட்டது. இதன்போது அணித் தலைவர் அல்ஹல்லாக் வழங்கிய பந்தை சக வீரர் அலி பஸ்மானி கோல் எல்லைக்குள் செலுத்த அதனை மல்டா கோலாக்கினார்.

தொடர்ந்து 25ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து அல்ஹல்லாக் இற்கு கொடுத்த பந்தை அவர் உயர்த்தி உள்ளே செலுத்தியபோது சக வீரரின் உடம்பில் பட்டு வந்த பந்தை பஸ்மானி கோலாக்கினார்

40 நிமிடங்கள கடந்த நிலையில் அல்ஹல்லாக் கோல் திசைக்கு செலுத்திய பந்து இலங்கை வீரர் லக்ஷான் தனன்ஜயவின் தலையில் பட்டு கோல் காப்பாளர் நுவன் கிம்ஹானவிற்கு மேலால்  கோலுக்குள் சென்றது.

எனவே, முதல் பாதி நிறைவின்போது சிரிய அணி மூன்று கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: சிரியா 3 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் இலங்கை வீரர்களின் தடுப்பாட்டம் முதல் பாதியை விட சற்று அதிகமானவும் வேகமாகவும் இருந்தது. இதன் காரணமாக 65ஆவது நிமிடம் வரை சிரிய வீரர்களால் கோல் பெற முடியாமல் போனது.

எனினும், 65 ஆவது நிமிடத்தில் சிரிய வீரர்கள் கோலுக்கு எடுத்த முயற்சியின்போது இலங்கை பின்கள வீரர் அப்துல் பாசித்தின் கால்களில் பட்டு பந்து ஓன் கோலாக மாறியது.

மீண்டும் 85ஆவது நிமிடத்தில் இலங்கை கோல் எல்லையில் சிரிய வீரர்கள் மேற்கொண்ட சிறந்த வேகமான பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில், பஸ்மானி தனது இரண்டாவது கோலையும் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துப் பரிமாற்றங்கள் ஆரம்பம் முதலே சிறந்த முறையில் இடம்பெறாமல் இருந்தாலும், தடுப்பாட்டத்தினை மேற்கொண்டதால் எதிரணிக்கு மேலும் பல கோல்களை விட்டுக் கொடுப்பதில் இருந்து தவிந்து கொண்டது.

எனவே, போட்டி நிறைவில் தமது முதல் போட்டியை 5-0 என சிரிய அணி இலகுவாக வென்றது.

இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் 28ஆம் திகதி போட்டிகளை நடாத்தும் கட்டார் அணியை சந்திக்கவுள்ளது. சிரிய வீரர்கள் அதே தினத்தில் ஏமன் அணியை எதிர்த்தாடவுள்ளனர்.

முழு நேரம்: சிரியா 5 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

சிரியா – மொஹம்மட் மல்டா 1’, அலி பஸ்மானி 25’&85’, மொஹம்மட் அல்ஹல்லாக் 42’, அப்துல் பாசித் 65’ (OG)

மஞ்சள் அட்டை

இலங்கை – பதுர்டீன் தஸ்லிம் 17’, அப்துல் பாசித் 28’

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<