இலங்கை – இங்கிலாந்து இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக அதிக சவால்மிக்க 358 ஓட்டங்களை இலங்கைக்கு நிர்ணயம் செய்துள்ளது.
>>மே.இ.தீவுகள் செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகின்றனர். இதில் இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் முதலாவதாக நடைபெறுகின்றது. இதில் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்க தொடரினை தீர்மானிக்கும் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஹர்ரி புரூக் முதலில் துடுப்பாட தீர்மானித்திருந்தார். இப்போட்டிக்கான இலங்கை குழாம் வனிந்து ஹஸரங்கவினை ப்ரமோத் மதுசானிற்குப் பதிலாக இணைத்திருந்தது.
இலங்கை XI
பெதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, ஜெப்ரி வண்டர்செய், அசித பெர்னாண்டோ
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்துக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த ரெஹான் அஹமட் 24 ஓட்டங்களும், பென் டக்கெட் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி சற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், அனுபவ வீரர் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஜோடி அணியை மீட்டெடுத்தது. ஜேக்கப் பெத்தேல் 72 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
>>ICC T20 உலகக்கிண்ணத் தொடருக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு
மறுமுனையில் மிகவும் நேர்த்தியாக விளையாடிய ஜோ ரூட், 108 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு துணையாக வந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஹர்ரி புரூக் அதிரடியாக ஆட இங்கிலாந்து அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் வெறும் 66 பந்துகளை முகம் கொடுத்த ஹர்ரி புரூக் 9 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகளுடன் 136 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது நின்றார்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹஸரங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வண்டர்செய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். தற்போது 358 ஓட்டங்கள் என்கிற கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகின்றது.





















