2025ஆம் ஆண்டுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆடவர் ஆசிய கிண்ண T20 தொடரின் இறுதிக் குழுநிலைப் போட்டியில், இலங்கை A பங்களாதேஷை 06 ஓட்டங்களால் த்ரில்லராக வீழ்த்தியுள்ளது.
>>பங்களாதேஷ் T20I அணியின் உப தலைவராகும் இளம் வீரர்<<
நேற்று (19) டோஹாவின் வெஸ்ட் எண்ட் பார்க் மைதானத்தில் ஆரம்பமான தொடரின் 12ஆவது இந்தப் போட்டி குழு A அணிகளின் இறுதி மோதலானது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் A பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணிக்கு தடுமாற்றம் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த இலங்கைத் தரப்பிற்கு, சஹான் ஆராச்சிகே பொறுப்பாக ஆடி ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார். அவர் இதில் 49 பந்துகளில் 5 பௌண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்க 69 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் துனித் வெல்லாலகேயின் அதிரடியோடு 20 ஓவர்களில் இலங்கை A அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் பெற்றது. வெல்லாலகே 14 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றார்.
பங்களாதேஷ் A பந்துவீச்சில் அபு ஹைதர் மற்றும் ரிப்பொன் மொண்டோல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 160 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் A அணியானது, தொடக்கத்தில் சிறு தடுமாற்றம் காட்டிய போதும் பின்னர் நிதானமாக ஓட்டங்கள் சேர்த்து வெற்றி இலக்கினை நெருங்கியது.
>>பாகிஸ்தான் முத்தரப்பு T20i தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைப்பு <<
எனினும் இலங்கை A அணியின் தலைவர் துனித் வெல்லாலகே அவ்வணிக்கு நெருக்கடி வழங்க போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்குவது இறுக்கமானது. இந்த தருணத்தில், போட்டியின் இறுதி ஓவரினை வீசிய மிலான் ரத்நாயக்க இறுதி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவைப்பட 11 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்தார்.
இதனால் பங்களாதேஷ் A அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களையே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.
பங்களாதேஷ் A அணியின் துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
மறுமுனையில் துனித் வெல்லாலகே இலங்கை A அணிக்காக அணிக்காக 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். துனித் வெல்லாகே தனது சிறப்பான ஆட்டத்துக்காக போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் வெற்றி மூலம் குழு A இலிருந்து அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை, அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















