பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலையின் ஷானுக்க கொஸ்தா மற்றும் மாத்தளை, யயட்டவத்த வீரபராக்ரம இரண்டாம் நிலை கல்லூரியின் சத்துர துலாஞ்சன ஆகிய வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
நேற்று (24) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஷானுக்க கொஸ்தா, போட்டியை 47.72 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
அப் போட்டியில் சீன வீரர் ஜியா யெங் (46.57 செக்.) தங்கப் பதக்கத்தையும், ஐக்கிய அரபு இராச்சிய வீரர் சயீத் ஷொயெப் (47.18 செக்.) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
இதேவேளை, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சத்துர துலாஞ்சன, 62.51 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியயை எறிந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
இந்தப் போட்டியில் சீன வீரர் {ஹவைச்சு வூ (68.38 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சைனீஸ் தாய்ப்பே வீரர் பங் சுவான் கியூ (64.91 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
>>ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் லஹிரு<<
இதனிடையே, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான இரண்டாவது தகுதிகாண் சுற்றில் 3ஆம் இடத்தைப் பெற்ற இலங்கையின் நேதன் வில்லத்தர, இன்று (25) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
அதேபோல, இன்று நடைபெறவுள்ள பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பி.எச் அமாயா, ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ருசித் நிம்சர, பெண்களுக்கான நீளம் பாய்தலில் டில்னி நெத்சலா மற்றும் ஆண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் சிரந்த தேஷான் ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
இதேவேளை, 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு இதுவரை ஒரு தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளன. இந்த 4 பதக்கங்களும் மெய்வல்லுநர் போட்டிகளில் கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<




















