இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் தொடரினை அடுத்து நடைபெறவுள்ள T20I தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை T20i அணியை அறிவித்துள்ளது.
>>அவுஸ்திரேலிய தொடரில் இலங்கை A அணிக்கு முதல் வெற்றி
இந்த குழாத்தின் மூலம் இளம் வேகப்பந்துவீச்சாளரான எஷான் மலிங்காவிற்கு முதன் முறையாக T20 சர்வதேச அணியில் ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
எஷான் மலிங்க கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான போதிலும் அவர் தற்போது உலகின் பல்வேறு T20 லீக்குகளில் சிறப்பாக பந்துவீசியிருப்பது அவருக்கான தேசிய அணி வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தவகையில் இறுதிப்பருவத்திற்கான IPL மற்றும் SA20 போன்ற T20 லீக்குகளில் மலிங்க சிறப்பாக பந்துவீசியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேநேரம் T20 அணியின் தலைவராக சரித் அசலங்க காணப்பட, முன்னாள் தலைவரும் அனுபவமிக்க சகலதுறை வீரருமான தசுன் ஷானக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் துனித் வெல்லாலகே மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோரும் மீண்டும் இலங்கை T20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்துடனான இலங்கையின் இறுதி T20I தொடரில் விளையாடிய பானுக்க ராஜபக்ஷ, அசித பெர்னாண்டோ, மற்றும் சமிந்து விக்கிரமசிங்க ஆகியோருக்கு பங்களாதேஷ் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரினை அடுத்து 10ஆம் திகதி கண்டி பல்லேகலவில், T20i தொடர் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை T20I குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் பேரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, சாமிக கருணாரட்ன, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வன்டர்சே, மதீஷ பதிரன, நுவான் துஷாரா, பினுர பெர்னாண்டோ, எஷான் மலிங்க