இந்திய அணிக்கு மிட்செல் ஜொன்சன் விடுக்கும் எச்சரிக்கை

ICC T20 World Cup 2022

88

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்வுள்ள இந்திய அணி மிகப் பெரிய சவாலை சந்திக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜொன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத்துக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான். ஆனால் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ளனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த குழாத்தில் இந்திய அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி இடம்பெறாதது தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் அதிக வேகமும், பவுன்ஸும் இருக்கும். இப்படிப்பட்ட ஆடுகளங்களில் மொஹமட் ஷமி நன்றாக பந்துவீசுவார். ஆனால் அவர் மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜொன்சன், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில் T20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணித் தேர்வில் தவறு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கை விடுத்து T20 உலகக் கிண்ணம் தொடர்பில் அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,

”அவுஸ்திரேலியாவில் ஒரு அணியின் இறுதிப் பதினொருவரில் முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் 3 அல்லது 4 பேர் நிச்சயம் தேவை. குறிப்பாக பேர்த் போன்ற மைதானங்களில் வேகப் பந்துவீச்சு தான் எடுபடும். ஆனால் இந்தியா இறுதிப் பதினொருவரில் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து 3 வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் எனத்தெரிகிறது. ஆடுகளத்தின் தன்மை தெரிந்திருந்தாலும் பிசிசிஐ தெரிந்து கொண்டே இந்த ஆபத்தான முடிவை எடுத்துள்ளது.

இந்திய அணியில் பும்ராவை தவிர மற்ற 3 பேரும் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச தடுமாறுவார்கள். ஆனால் அது அவசியம் கிடையாது. அனைவரும் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச வேண்டும் என்பது முக்கியம் அல்ல, அதே சமயம் குறைந்த வேகத்திலும் நல்ல வேரியேஷன்களை காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும்” எனக்கூறியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<