இலங்கை மங்கைகளை வீழ்த்திய இங்கிலாந்து மகளிர்

359

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி டகவத் லுவிஸ் முறையில் 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அம்பாந்தோட்டையில் இன்று (16) நடைபெற்ற இந்தப் போட்டி ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாகவே இடம்பெற்றது.

இதில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த சவாலான 332 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணி ஓட்டம் பெறும் முன்னரே ஆரம்ப வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனியின் விக்கெட்டை பறிகொடுத்ததோடு தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்துடன் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர்.

35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 40 ஓவர்களில் 314 ஆக மாற்றப்பட்டது.

இலங்கை மகளிர் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிருக்கு அபார வெற்றி

இலங்கை மகளிர் வளர்ந்துவரும் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையில்…

வெற்றி வாய்ப்பு நழுவிய நிலையில் கடைசி வரிசை வீராங்கனைகளான நிலக்ஷி தமயந்தி மற்றும் ஓஷதி ரணசிங்க 8 ஆவது விக்கெட்டுக்கு 88 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது. இதில் ரணசிங்க 72 பந்துகளில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றதோடு தமயந்தி 78 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றார்.

இதனால் இலங்கை மகளிர் அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து மகளிர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஆர்மி ஜோன்ஸ் மற்றும் டம்சின் பவுமொன்ட் 114 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் ஏமி ஜோன்ஸ் 71 பந்துகளில் 79 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து மத்திய வரிசையில் அணித்தலைவி ஹீதர் நைட் 61 ஓட்டங்களை பெற்றதோடு நட்டாலி சிவர் அதிரடியாக 73 பந்துகளில் 93 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 331/7 (50) – நட்டாலி சிவர் 93, ஏமி ஜோன்ஸ் 79, ஹீதர் நைட் 61, டானியல் வியாட் 41, ஓஷதி ரணசிங்க 2/71

இலங்கை – 159/8 (40) – ஓஷதி ரணசிங்க 51*, நிலக்ஷி தமயன்தி 45, சாமரி அத்தபத்து 30, கெத்தரின் பிருன்ட் 3/24, கத்ரின் கிரொஸ் 2/33

முடிவு – இங்கிலாந்து 154 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<