இலங்கை A அணிக்காக கலக்கிய மொஹமட் சிராஸ்

2434

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கிடையே நடைபெற்றுவரும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை A அணி மொஹமட் சிராஸ் மற்றும் லசித் அம்புல்தெனிய ஆகியோரின் அபார பந்துவீச்சோடும் கமிந்து மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன ஆகியோரின் அசத்தல் துடுப்பாட்டத்துடனும் வலுப்பெற்றிருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து A கிரிக்கெட் அணி, இலங்கை A கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடர் என்பவற்றில் விளையாடுகின்றது.

>>மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்

இந்நிலையில் இன்று (5) இலங்கை A – அயர்லாந்து A அணிகள் மோதும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து A அணித் தலைவர் ஹர்ரி டெக்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது அணிக்காக தேர்வு செய்திருந்தார்.

தொடர்ந்து முதலில் துடுப்பாடிய அயர்லாந்து A அணி தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஸ்டெபன் டொஹேனியின் விக்கெட்டை, இலங்கை A அணிக்காக தனது கன்னிப் போட்டியில் விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸிடம் பறிகொடுத்தது.

இதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த ஆரோன் கில்லெஸ்பி, ஜேம்ஸ் ஷன்னோன் ஆகியோரது விக்கெட்டுக்களையும் மொஹமட் சிராஸ் தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் சாய்த்திருந்தார். இதனால், தொடக்கத்திலேயே அயர்லாந்து A அணி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

Photos: Ireland A Team Tour to Sri Lanka 2018/19 – 1st Four Day Game – Day 1

இதன் பின்னர், தடுமாறியிருந்த அயர்லாந்து A அணியினை ஆட்டமிழக்காமல் நின்ற ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் மெக்கொல்லம் அரைச்சதம் ஒன்றுடன் கட்டியெழுப்பினார்.

இதனை அடுத்து இலங்கை A அணியின் இடதுகை சுழல் வீரரான லசித் அம்புல்தெனிய அபாரமாக செயற்பட ஜேம்ஸ் மெக்கொல்லமின் விக்கெட் உட்பட அயர்லாந்து A அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிலரினதும் விக்கெட்டுக்கள் சாய்க்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்தும் மொஹமட் சிராஸ் – லசித் அம்புல்தெனிய ஜோடியின் பந்துவீச்சில் சிதைந்த அயர்லாந்து A அணி 45.2 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 153 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்ஸில் பெற்றது.

அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பெற்றிருந்த ஜேம்ஸ் மெக்கொல்லம் 108 பந்துகளில் 10 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதேநேரம் இலங்கை A அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட மொஹமட் சிராஸ் மற்றும் லசித் அம்புல்தெனிய ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

>>ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

அயர்லாந்து A அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை A அணி ஆரம்பத்தில் தடுமாறியது.

எனினும், பின்னர் களம் வந்த தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான மிலிந்த சிறிவர்தன – கமிந்து மெண்டிஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த அரைச்சதங்களின் துணையுடன் முதல் நாள் நிறைவில் இலங்கை A அணி 42 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 185 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் மிலிந்த சிறிவர்தன 73 ஓட்டங்களோடும், கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களோடும் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<