இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கிடையில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நிபுன் தனன்ஜயவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கையை இலகுவாக வீழ்த்திய இந்திய இளையோர் அணி
இந்திய இளையோர் அணி நிர்ணயித்திருந்த 194 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 45.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்ததுடன், தொடரையும் 1-1 என சமப்படுத்தியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில், கடந்த மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்த இந்திய இளையோர் அணி, 1-0 என்ற முன்னிலையுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய இளையோர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் ஒருநாள் போட்டி உட்பட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இலங்கை அணிக்கு கடும் சவாலை கொடுத்திருந்தது. எனினும் இந்த தொடரில் முதல் தடவையாக இலங்கை அணி வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் கொண்ட இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை கட்டுப்படுத்த இலங்கை இளையோர் அணி வியூகம் அமைத்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பவன் சஹா மாத்திரம் சற்று நிலைத்தாட, மறுமுனையில் அனுஜ் ரவாட், அதர்வா டைட் மற்றும் அணித் தலைவர் அர்யான் ஜுயல் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆயுஸ் படோனியுடன் ஜோடி சேர்ந்த பவன் சஹா 49 ஓட்டங்களை குவித்து, ஒரு ஓட்டத்தால் அரைச்சதத்தை தவறவிட, அடுத்து களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
அணிக்கு முழுமையாக பங்களிக்க முடியாமல் மைதானத்திலிருந்து வெளியேறிய திக்வெல்ல
எனினும் இலங்கை அணியின் சவால் மிக்க பந்து ஓவர்களை சிறப்பாக எதிர்கொண்ட இந்திய அணியின் பின்வரிசை வீரர்களான சமீர் சௌத்ரி 32 ஓட்டங்கள், அஜய் டேவ் கவுட் 24 ஓட்டங்கள் மற்றும் மொஹின் ஜங்ரா 16 ஓட்டங்களையும், துடுப்பாட்ட வீரர் ஆயுஸ் படோனி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இந்திய அணி 47 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் சஷிக டுல்ஷான் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், லக்ஷித மானசிங்க, நவீன் பெர்னாண்டோ மற்றும் நவோத் பர்னவிதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீ்ழ்த்தினர்.
பின்னர், 194 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி, ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், பின்னர் சிறப்பான இணைப்பாட்டத்தின் ஊடாக துடுப்பாட்ட இன்னிங்ஸை நகர்த்தியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நவோத் பர்னவிதான 4 ஓட்டங்களுடனும், நிசான் மதுஷங்க 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, அணித் தலைவர் நிபுன் தனன்ஜய பொறுப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் நிபுன் தனன்ஜய அரைசச்தத்தை கடக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய நவிந்து பெர்னாண்டோ 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க
எவ்வாறாயினும், நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நிபுன் தனன்ஜய மற்றும் பசிந்து சூரியபண்டார ஜோடி, இலங்கை இளையோர் அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றது. இருவரும் 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், பசிந்து சூரியபண்டார 52 ஓட்டங்களுடன் அஜய் டேவ் கவுட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சந்துன் மெண்டிஸ் வந்த வேகத்தில் ஓட்டமெதுவும் பெறாமல் வெளியேற, இறுதிவரை களத்திலிருந்து அணிக்கு வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற, அணித் தலைவர் நிபுன் தனன்ஜய 112 பந்துகளுக்கு முகங்கொடுத்து, 7 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியின் சார்பில் சித்தார்த் டேசாய் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அஜய் டேவ் கவுட் 32 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்படி 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்த இலங்கை இளையோர் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
ஆட்டநாயகன் – நிபுன் தனன்ஜ்சய




















