சம்பியன் லீக் அரையிறுதியில் ரியல் மெட்ரிட், பயேர்ன் பலப்பரீட்சை

237
Image Courtesy - Sky Sports

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டிகளில் லிவர்பூல் அணி ரோமாவுடன் மோதவிருப்பதோடு ரியல் மெட்ரிட் ஜெர்மனி கழகமான பயேர்ன் முனிச்சுடன் (Bayern Munich) பலப்பரீட்சை நடத்தும்.

பல குதிகாண் போட்டிகள் மற்றும் 120 ஆட்டங்களுக்கு பின்னர் சம்பியன்ஸ் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு தெரிவாகி இருக்கும் நான்கு அணிகளையும் பிரிக்கும் குலுக்கல் நிகழ்வு சுவிட்சர்லாந்தின், நியோ நகரில் இருக்கும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றிய (UEFA) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

இதில் நடப்பு சம்பியன் ரியல் மெட்ரிட் கடந்த ஆண்டு காலிறுதியில் பலப்பரீட்சை நடத்திய பயேர்ன் முனிச் அணியை இம்முறை அரையிறுதியில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். அந்த காலிறுதிப் போட்டியில் ரியல் மெட்ரிட் கழகம் இரண்டாம் கட்ட போட்டியின் மேலதிக நேரத்தில் 3 கோல்களை போட்டு சர்ச்சைக்குரிய முறையில் வெற்றியீட்டி இறுதியில் கிண்ணத்தையும் வென்றது. எனினும் இம்முறை தொடரில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு கட்டங்கள் கொண்ட அரையிறுதியின் முதல் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி மே மாதம் முதலாம் திகதி நடைபெறும்.

அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட்

அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப்…

ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாகவே சம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தபோதும் காலிறுதிப் போட்டிகளில் அது போராட்டம் நடத்த வேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட காலிறுதியில் ஜுவன்டஸ் அணி 3 கோல்களை பெற்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் மேலதிக நேரத்தில் ரொனால்டோ பெனால்டி கோல் ஒன்றை பெற்றே ரியல் மெட்ரிட் கழகத்தை அரையிறுதிக்கு நுழையச் செய்தார்.

மறுபுறம் சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிர்ச்சி தரும் வகையில் எழுச்சி பெற்ற ரோமா அணி காலிறுதியில் எவரும் எதிர்பார்க்காத வகையில் பலம் மிக்க பார்சிலோனா அணியை வெளியேற்றியே அரையிறுதிக்கு நுழைந்தது. இத்தாலியின் தலைநகரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட காலிறுதியில் லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான பார்சிலோனாவை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோமா அணி அதிர்ச்சி கொடுத்தது.

இதன்படி காலிறுதியில் மென்செஸ்டர் சிட்டியை 5-1 என்ற மொத்த கோல்கள் வித்தியாசத்தில் வென்ற லிவர்பூல் அணியை, இறுதிப் போட்டிக்கு முந்திய சுற்றில் ரோமா அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் கட்ட அரையிறுதிப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருப்பதோடு இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி மே மாதம் 2 ஆம் திகதி நடைபெறும்.

2005 சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான லிவர்பூல் 2002 மார்ச் மாதம் தொடக்கம் ரோமா அணியை போட்டி ஒன்றில் எதிர்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி மே மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.