டயலொக் ரக்பி லீக் 2ஆம் கட்டப் போட்டிகளின் 2ஆவது வாரப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட ஹெவலொக் விளையாட்டுக் கழகம் இறுதி நிமிடங்களில் மேற்கொண்ட முயற்சியினால் மேலதிக புள்ளியுடன் 29-13 என்று வெற்றியீட்டியது.

போட்டியின் 60 நிமிடங்கள் வரை பொலிஸ் அணி முன்னிலை வகித்த நிலையில், இறுதி நேர ட்ரைகளினால் ஹெவலொக் அணி போனஸ் புள்ளிகளுடன் முக்கிய வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதல் பாதியில் பொலிஸ் அணி பிரபல ஹெவலொக் அணிக்கு அழுத்தம் கொடுத்து அசத்தியது.  எனினும் இரண்டாம் பாதியில் மேற்கொண்ட சில பிழையான முடிவுகளால் அவ்வணி தோல்வியை தழுவியது. குறிப்பாக கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளையும் கம்பத்தினை நோக்கி உதையாது முக்கிய புள்ளிகளை தவறவிட்டது.

போட்டியின் முதலாவது புள்ளியை பொலிஸ் அணி பெற்றுக்கொண்டது. கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்திய ராஜித சன்சோனி 20 மீட்டர் தொலைவில் இருந்து வெற்றிகரமாக கம்பத்தினுல் உதைந்து 3 புள்ளிகளை பொலிஸ் அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 3- ஹெவலொக் 0)

எனினும் சில நிமிடங்களில் ஹெவலொக் அணி ட்ரையின் மூலம் போட்டியில் முன்னிலை பெற்றது. லைன் அவுட் மூலம் பந்தை பெற்றுக்கொண்டு, ரோலிங் மோல் மூலம் பிரசாத் மதுசங்க ஹெவலொக் அணி சார்பாக ட்ரை வைத்தார். (பொலிஸ் 3 – ஹெவலொக் 5)

முதல் பாதி முடிவடையும் நேரத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்ட பொலிஸ் அணி, முதல் பாதியை 6-5 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 06 – 05 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் முதல் 20 நிமிடங்களுக்கு இரு அணியும் கடுமையாக மோதிக்கொண்டன. எனினும் பொலிஸ் அணி வீரர் முஷீன் பளீல் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, அதன் மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி துலாஜ் பெரேரா மூலமாக ஹெவலொக் அணி 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.  (பொலிஸ் 6 – ஹெவலொக் 8)

பொலிஸ் அணி 14 வீரர்களை மாத்திரம் கொண்டு விளையாடும் வேளையில், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஹெவ்லொக் அணி, அருமையான ட்ரை ஒன்றை வைத்தது. சாமர தாபரேவின் உதவியுடன் ஹிரந்த பெரேரா கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 6 – ஹெவலொக் 15)

மீண்டும் ஒரு முறை சாமர தாபரேவின் அற்புதமான விளையாட்டினால் ஹெவலொக் அணி மேலும் ஒரு ட்ரை வைத்தது. சாமர தாபரேயிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட லஸிந்து இஷான், மைதானத்தில் ஓரத்தில் ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா கடினமான உதையை வெற்றிகரமாக உதைந்தார். (பொலிஸ் 6 – ஹெவலொக் 22)

போட்டி நிறைவடைய 5 நிமிடங்கள் இருக்கும் நிலையில் பொலிஸ் அணி ட்ரை வைத்தது. சந்தேஷ் ஜெயவிக்ரம வழி அமைத்து கொடுக்க, ராஜித சன்சோனி ட்ரை வைத்தார். அவர் உதையையும் வெற்றிகரமாக உதைந்த பொழுதும் ஹெவலொக் அணி 9 புள்ளிகள் முன்னிலையில் காணப்பட்டதால் அதை குறுகிய நேரத்தில் அடைவது பொலிஸ் அணிக்கு கடினமாக அமைந்தது. (பொலிஸ் 13 – ஹெவலொக் 22)

ஹெவலொக் அணிக்கு இறுதி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. மேலதிக புள்ளியை பெற்றுக்கொள்வதற்காக முயற்சி செய்த ஹெவலொக் அணி, துஷ்மந்த பிரியதர்ஷன மூலமாக ட்ரை வைத்து மேலதிக புள்ளியை பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 13 – ஹெவலொக் 29)

பொலிஸ் அணி போட்டியில் வெற்றிபெற முனைந்த பொழுதும் பந்தை கையாளுவதிலும் தீர்மானங்களிலும் தவறுகளை மேற்கொண்டதனால் அரிய வாய்ப்புக்களை இழந்தது. இரண்டு அணியிலும் தலா இரண்டு வீரர்கள் நடுவரினால் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 13 – 29 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ஹெவலொக் அணி, இப்போட்டியில் மேலதிக புள்ளியை பெற்றுக்கொண்டதனால் இந்த பருவகால ரக்பி லீக்கின் தற்போதைய புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ThePapare போட்டியின் சிறந்த வீரர் – கனிது லக்ஷன் (ஹெவலொக்)

மஞ்சள் அட்டைகள் – செனால் சில்வா, ஜனிக் ஜயசூரிய  (ஹெவலொக்) , முஷீன் பளீல், உதார கயான் (பொலிஸ் )

புள்ளிகள் பெற்றோர்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் ணி

ட்ரை – ஹிரந்த பெரேரா, லசிந்து இஷான், துஷ்மந்த பிரியதர்ஷன, பிரசாத் மதுசங்க

கொன்வெர்சன் – துலாஜ் பெரேரா – 3

பெனால்டி – துலாஜ் பெரேரா – 1

ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

ட்ரை – ராஜித சன்சோனி – 1

கொன்வெர்சன் – ராஜித சன்சோனி – 1

பெனால்டி – 2