தேசிய விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டத்தில் மேல் மாகாணம் சம்பியன்

303

மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மேல் மாகாண அணி முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

Photos: 44th National Sports Festival Basketball – Day 1 – Morning events

Photos of 44th National Sports Festival Basketball…

இதேவேளை, ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை கிழக்கு மாகாண அணியும், மூன்றாமிடத்தை வட மாகாண அணியும் பெற்றுக்கொண்டன. பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை வட மாகாண அணியும், மூன்றாமிடத்தை தென் மாகாண அணியும் பெற்றுக்கொண்டன.  

விளையாட்டு அமைச்சின் 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாகிய கூடைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க கூடைப்பந்து திடலில் மிகவும் விமர்சையாக நடைபெற்றன.

இங்கு குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயம், இலங்கையில் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கென யாழ் மாவட்டம் தவிர எந்தவொரு மாவட்டத்திலும் கூடைப்பந்தாட்ட திடல் இல்லை. அந்த வகையில் இத்திடலில் அதிக பார்வையாளர்களுடன் சுவாரஷ்யமாகவும், போட்டித்தன்மையுடனும் இந்த மோதல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு (20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில்) இடம்பெற்றன.

கலை, கலாசார, நடன நிகழ்வுகளுடன் வீரர்கள், விருந்தினர்கள் வரவேட்கப்பட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்கள் பிரிவில் ஒன்பது அணிகள் போட்டிகளுக்காக வருகை தந்திருந்தன. அதேவேளை, பெண்கள் பிரிவில் ஊவா மற்றும் வடமேல் மாகாண அணிகள் தவிர்ந்த ஏனைய அணிகள் போட்டியில் பங்குபற்றுவதற்கு வருகை தந்திருந்தன.

ஆண்கள் பிரிவு

ஆரம்ப சுற்று முடிவுகள்

வட மத்திய மாகாணம் 68 – 70 வட மேல் மாகாணம்
தென் மாகாணம் 43 – 75 மேல் மாகாணம்
சப்ரகமுவ மாகாணம் 40 – 57 கிழக்கு மாகாணம்
ஊவா மாகாணம் 41 – 68 வட மாகாணம்
மத்திய மாகாணம் 74 – 50 வட மேல் மாகாணம்

Photos: 44th National Sports Festival Basketball – Day 01

Photos of 44th National sports festival Basketball – Day 01…

அரையிறுதிச் சுற்று

போட்டித் தொடரின் இரண்டாவது தினமான 21ஆம் தினதி சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் இடம்பெற்றன.

வடமாகாணம் எதிர் மேல் மாகாணம்

இந்த மோதலின் ஆரம்பத்தில் இரு அணிகளும் சம அளவில் மோதிய நிலையில் முதல் கால் பகுதி ஆட்டம் தலா 13 புள்ளிகளுடன் சமநிலையில் நிறைவுற்றது.

எனினும், இரண்டாம், மூன்றாம் கால் பகுதிகளின்போது மேல் மாகாண அணி அதிகமான புள்ளிகளைப் பெற்றது. எனவே, முதல் அரையிறுதிப் போட்டியின் நிறைவில் 68 – 43 என முன்னிலை பெற்ற மேல் மாகாண அணியினர் மேலதிக 25 புள்ளிகளால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

கிழக்கு மாகாண எதிர் மத்திய மாகாணம்

பின்னர் மின்னொளியின் கீழ் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மாகாணத்தை எதிர்த்து மத்திய மாகாணம் மோதியது. ஆரம்பம் முதல் முடிவு வரை இறுதிப் போட்டிக்குள் எந்த அணி நுழையும் என்ற தூண்டலை பார்வையாளரிடம் ஏற்படுத்தியதாக இந்த மோதல் அமைந்தது.

முதல் கால்ப் பகுதியில் 14-15 என்றும், இரண்டாம் கால்ப் பகுதியில் 21-18 என்றும், மூன்றாம் கால்ப் பகுதியில் 13-18 என்றும் இறுதி கால்ப் பகுதியில் 18-13 என்றும் புள்ளிகளைப் பெற்று இறுதிவரை இரு அணியும் போராடி, நிறைவில் 66-64 என்ற புள்ளிகள் அடிப்படையில் மத்திய மாகாணத்தை விட இரு புள்ளிகள் மேலதிகமாகப் பெற்ற கிழக்கு மாகாணம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

மூன்றாம் இடத்திற்கான மோதல்

அரையிறுதியில் தோல்வியடைந்த வட மாகாண அணியும் மத்திய மாகாண அணியும் மூன்றாமிடத்திற்கான போட்டியில் மோதின். முதல் கால் பகுதி 18-15 என வட மாகாண அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.

Photos: 44th National Sports Festival Basketball – Day 2 – Morning Events

Photos of 44th National Sports Festival Basketball – Day 2…

ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு மாகாண அணி

இரண்டாம் கால் பகுதியில் இரு அணிகளும் 8-8 என புள்ளிகளைப் பெற, மூன்றாம் கால் பகுதி 11-07 என வட மாகாணத்தின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது. எனவே, மூன்றாம் கால் பகுதி முடிவின் போது மொத்தமாக 37-30 என்ற 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வட மாகாணம் முன்னிலையடைந்தது.

இந்நிலையில் 19-11 என்ற புள்ளிகளடிப்படையில் நான்காம் கால் பகுதி முடிவிற்கு வந்தது. எனவே, ஆட்டத்தின் முடிவு வரை சளைக்காது வேகத்துடனும், விவேகத்துடனும், சாதுரியத்துடனும் விளையாடி வட மாகாண அணி 56-41 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.

இறுதிப் போட்டி

சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இந்த மோதலில் கிழக்கு மாகாண அணியும் மேல் மாகாண அணியும் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக ஆரம்பித்த இறுதியாட்டத்தில் முதல் இரண்டு கால் பகுதிகளையும் முறையே 13-12 மற்றும் 22-10 என கைப்பற்றிய மேல் மாகாண வீரர்கள் முதல் பாதி ஆட்டத்தில் 35-22 என முன்னிலை பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டம் வென்ற மேல் மாகாண அணி

மீண்டும் அடுத்த இரண்டு கால் பகுதிகளையும் முறையே 22-11 மற்றும் 20 – 12 என்று புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாண வீரர்கள் ஆட்டத்தை 77-45 என வெற்றி கொண்டு இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவின் சம்பியன்களான முடிகூடிக்கொண்டனர்.

எதிரணியை சிறப்பாக தடுத்தாடி அவர்களது புள்ளிகளை தடுத்த வீரருமான மேல்மாகாண அணியின் சுதேஷ் பாய்வா சிறந்த வீரருக்கான பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.  

பெண்கள் பிரிவு

ஆரம்ப சுற்று முடிவுகள்

மத்திய மாகாணம் – ஊவா மாகாணம் (மத்திய மாகாணம் வெற்றி – வோக் ஓவர்)
வட மேல் மாகாணம் – வட மாகாணம் (வட மாகாணம் வெற்றி – வோக் ஓவர்)
வட மத்திய மாகாணம் 13 – 65 மேல் மாகாணம்
தென் மாகாணம் 60 – 32 கிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம் 08 – 30 மத்திய மாகாணம்

Photos : 44th National sports festival Basketball – Day 03 Morning

Photos of 44th National sports festival Basketball – Day 03…

அரையிறுதிப் போட்டி

முதலாவது அரையிறுதுி மோதலில் தென் மாகாண அணியும் வட மாகாண அணியும் மோதிக்கொண்டன. முதல் 3 கால் பகுதிகளையும் முறையே 18-09, 14-06 மற்றும் 12-02 என வெற்றி கொண்ட வட மாகாண அணியினர் இறுதி கால் பகுதியில் 08-09 என தோல்வியடைந்தனர்.

எனினும், ஆட்டத்தின் நிறைவில் 52-26 என்ற மொத்தப் புள்ளிகள் கணக்கில் வட மாகாணம் இலகுவாக வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மத்திய மாகாண அணியை 72-24 என்ற புள்ளிகள் கணக்கில் மேல் மாகாண அணி இலகுவாக வெற்றி கொணடு, இறுதி மோதலுக்கு தெரிவானது.

மூன்றாம் இடத்திற்கான ஆட்டம்

பெண்கள் பிரிவின் மூன்றாமிடத்திற்கான போட்டியில் தென் மாகாணத்தை எதிர்த்து மத்திய மாகாணம் மோதியது. ஆரம்பத்தில் விறுப்பாக போட்டி இடம்பெற்ற பொழுதிலும் பின்னர் தென் மாகாணம் அதிகப்படியான புள்ளிகளை பெற்று, இரண்டாம், மூன்றாம், நான்காம் கால் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டது. இதனடிப்படையில் 68- 34 என்ற புள்ளிகள் அடிப்டையில் வெற்றி கொண்ட தென் மாகாணம் மூன்றாமிடத்தைப் பிடித்துக்கொண்டது.

Photos : 44th National Sports Festival Basketball – Final Day Evening

Photos of 44th National Sports Festival Basketball – Final Day…

இறுதிப் போட்டி

பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டம் வென்ற மேல் மாகாண அணி

இந்த மோதலில் வட மாகாண அணியை எதிர்த்து மேல் மாகாண அணி போட்டியிட்டது. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணியினரும் தொடர்ந்து தமது திறமையை முழுமையாகப் பயன்படுத்தி விளையாடிக்கொண்டனர். அந்த வகையில் முதலாவது கால் பகுதி முடிவிற்கு வந்தவேளை வட மாகாணத்தை விட மேல் மாகாணம் இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று (11-09) முன்னிலையிலிருந்தனர்.

அதே வேகத்துடன் நடைபெற்ற இரண்டாம் கால் பகுதியில் வட மாகாண அணி சிறப்பாக விளையாடி 18 புள்ளிகளைப் பெற, மேல் மாகாண அணியினர் 16 புள்ளிகளைப் பெற்றனர். எனவே, ஆட்டத்தின் முதல் பாதியின்போது இரு அணியினரும் தலா 27 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தனர்.  

முதல் கால் பகுதி போன்றே மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற 3ஆவது கால் பகுதியில் மேல் மாகாண வீராங்கனைகள் 19-16 என முன்னிலை பெற்றனர். (46-42)  

எனவே, வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி கால் பகுதியில் மீண்டும் வேகம் காண்பித்த வட மாகாண அணியினர் 16-12 என முன்னிலை பெற்று போட்டியின் வெற்றி விளிம்பில் இருந்தனர். எனினும், போட்டி முடிவிற்கான நடுவருடைய அழைப்பு நிமிடத்துளிகளில் மேல் மாகாண அணி மூன்று புள்ளிகளைப் பெற்றது.

பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற வட மாகாண அணி

வட மாகாண அணியினர் குறித்த பகுதியை வெற்றி கொண்ட போதிலும் ஆட்டத்தின் நிறைவில் 61-58 என்ற 3 புள்ளிகள் வித்தியாசத்தின் மேல் மாகாண அணியினர் வெற்றி பெற, இறுதி நிமிடம் வரை வட மாகாண வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போனது.  

எனவே, 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பெண்கள் பிரிவுக்கான கூடைப்பந்து சம்பியன் பட்டத்தை மேல் மாகாண அணி தனதாக்கிக் கொண்டது.  

தமது சாமர்த்தியத்தாலும் அதி வேகத்தாலும் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடி தனது அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொடுத்த அதேவேளை, எதிரணியின் பந்துகளை கைப்பற்றி அணிக்கு சிறப்பாகப் பங்காற்றிய வட மாகாண வீராங்கனை எப்சிபா வொஷிங்டன் கிளே தொடரின் சிறந்த வீராங்கனைக்கான பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<