டில்ஷானின் சகோதரர் சம்பத்தின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியீட்டிய மாஸ் யுனிச்செல்லா

68

டில்ருவன் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்கவின் அபார பந்துவீச்சு மற்றும் திலகரத்ன சம்பத்தின் அதிரடி துடுப்பாட்டத்தால் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மாஸ் யுனிச்செல்லா அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27 ஆவது சிங்கர் – எம்.சி.ஏ பிரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி சம்பத் வங்கி மற்றும் மாஸ் யுனிச்செல்லா அணிகளுக்கு இடையில் இன்று (21) நடைபெற்றது.

NCC மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த இப்போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது. 

இதன்படி, இன்று காலை ஆரம்பமாகிய 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் யுனிச்செல்லா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

லக்ஷான் ரொட்ரிகோ அபாரம்: இறுதிப் போட்டியில் எல்.பி பினான்ஸ் அணி

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது…

இதன் அடிப்படையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய சம்பத் வங்கி அணியினர் டில்ருவன் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்கவின் பந்துவீச்சினை எதிர்கொள்ள தடுமாறி 32 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

சம்பத் வங்கி அணியின் துடுப்பாட்டத்தில் ஜீவன் மெண்டிஸ் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை குவித்திருந்தார், அபார பந்துவீச்சை வெளிக்காட்டிய லஹிரு மதுஷங்க மற்றும் டில்ருவன் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos: MAS Unichela vs Sampath Bank – 27th Singer-MCA Premier League 2020 – Knock-Out stage – Semi FInal 2

இதனை அடுத்து வெற்றி இலக்கை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய, டில்ருவன் பெரேரா தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா அணி திலகரத்ன சம்பத்தின் அதிரடியுடன் 13.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

இதில் அதிரடியாக விளையாடிய திலகரத்ன சம்பத் 46 ஓட்டங்களையும், மஹேல உடவத்த ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதன்படி, மாஸ் யுனிச்செல்லா மற்றும் எல்.பி பினான்ஸ் அணிகள் மோதும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27 ஆவது சிங்கர் – எம்.சி.ஏ பிரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி MCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 108 (32) – ஜீவன் மெண்டிஸ் 27, லஹிரு மதுஷங்க 3/18, டில்ருவன் பெரேரா 3/19

மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிச்செல்லா – 109/3 (13.2) – டி.எம் சம்பத் 46, மஹேல உடவத்த 26*

முடிவு – மாஸ் யுனிச்செல்லா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…