இலங்கை கிரிக்கட் சபையின் தேர்வுக் குழுத் தலைவராக கபில விஜேகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கட் அணி அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் சிறப்பாக செயற்படாத காரணத்தினால் தென்னாபிரிக்க அணியுடனான காலிறுதிப் போட்டியுடன் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது. அத்துடன் உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களிலும் இலங்கை அணி பெரிதாக சோபிக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை அணியின் தோல்விகளுக்கு அணித்தேர்வு காரணம் என பலராலும் பெரிதாக பேசப்பட்டது. இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய மீதே விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
அவருடன் சேர்ந்து தெரிவுக் குழுவின் மேலும் பல உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் புதிய தேர்வுக் குழுத் தலைவராக கபில விஜேகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை அணியின் முன்னாள் வீரரான கபில விஜேகுணவரத்தன 26 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 51 முதற்தர போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த தேர்வுக் குழுவில் அமல் சில்வா, பிரெண்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்கிரமரத்ன ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



















