இலங்கை இளையோர் அபிவிருத்தி அணியில் இரண்டு யாழ் வீராங்கனைகள்

183

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணியின் 20 பேர் கொண்ட வீராங்கனைகள் குழாத்தினை அறிவித்துள்ளது.

>> மீண்டும் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம்

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களை இலக்காகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி குழாத்தில், நாடெங்கிலும் நடாத்தப்பட்ட திறமை தேடுதல் (Talent Hunting) நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 120 பேரிலிருந்து, 20 வீராங்கனைகள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை மாவட்டரீதியாக ஒழுங்கு செய்து வைத்திருந்த அணிகளில் இருந்தும் இந்த வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீராங்கனைகள் குழாத்தில் வடக்கு, கிழக்கு வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தவகையில், யாழ்ப்பாணம் மஹாஜன கல்லூரி வீராங்கனையான சானு பாஸ்கரன் மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் மதுரிக்கா முரளிதாசன் ஆகிய இரண்டு வீராங்கனைகளும் மகளிர் அபிவிருத்தி கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் இருந்து லங்கா திலினி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம், தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகள் இலங்கை கிரிக்கெட் சபையினுடைய மாவட்ட, மாகாண பயிற்சியாளர்கள் வழங்கும் மூன்று மாதகாலம் கொண்ட பயிற்சி முகாமில் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி முகாமின் போது வீராங்கனைகளின் திறமை, உடற்தகுதி விருத்தி போன்ற விடயங்கள் மேம்படுத்தப்படுவதில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> ஏழு நகரங்களில் நடைபெறவுள்ள அடுத்த T20 உலகக் கிண்ணம்

மறுமுனையில் பயிற்றுவிப்புக் காலத்தின் போது தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில் ஊக்குவிப்புத்தொகையொன்றும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பயிற்சி முகாம் நிறைவடைந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மகளிர் வீராங்கனைகளுக்காக ஒழுங்கு செய்யும் கிரிக்கெட் தொடர்களில் பங்கெடுக்க இந்த அபிவிருத்தி குழாத்தில் இருக்கும் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மகளிர் அபிவிருத்தி குழாம்

  1. ரன்தி பிரேமரட்ன – புனித ஜோசப் கல்லூரி – கேகாலை
  2. சன்சால வனிகசேகர – நுகவெல மத்திய கல்லூரி – கண்டி
  3. தருஷி ராஜகுர்ண – நுகவெல மத்திய கல்லூரி – கண்டி
  4. PDSH. மஹேசிக்கா – புனித ஜோசப் கல்லூரி – கேகாலை
  5. WP. நிமேஷா தருணி – மாறப்பொல மஹா வித்தியாலயம் – கேகாலை
  6. நவோத்யா நேத்மினி – வாதுவ மத்திய கல்லூரி – களுத்துறை
  7. எமோக்ஷா பாஷினி – வாதுவ மத்திய கல்லூரி – களுத்துறை
  8. மனோஹரி நிஷன்சல – வாதுவ மத்திய கல்லூரி – களுத்துறை
  9. சவிந்தி நிமல்ஷா கூரே – வாதுவ மத்திய கல்லூரி – களுத்துறை
  10. சுலேஷா சத்சரனி – தேவபதிராஜ கல்லூரி – காலி
  11. செத்தானா விமுக்தி – பெல்வத்த மஹா வித்தியாலயம் – மொனரகால
  12. அயேஷா திலக்ஷனி – மஸ்பன்ன மஹா வித்தியாலயம் – பதுளை
  13. லங்கா திலினி – சிங்கள மஹா வித்தியாலயம் – திருகோணமலை
  14. ஷானு பாஸ்கரன் – மஹஜன கல்லூரி – யாழ்ப்பாணம்
  15. ஜனனி வீரக்கோன் – ரோயல் கல்லூரி – பொலன்னறுவை
  16. தருஷி சத்சரனி – பொரமடுல்ல மத்திய கல்லூரி – நுவரெலியா
  17. எரங்க திசநாயக்க – கட்டுப்பொத்த திஸ்ஸ MMV – குருநாகல்
  18. மதுரிக்கா முரளிதாசன் – ஸ்கந்தவரோதயா கல்லூரி – யாழ்ப்பாணம்
  19. துலங்க திசாநாயக்க – அனுல வித்தியாலயம் – நுகேகொட
  20. மெத்மா ஹெட்டியராச்சி – அனுல வித்தியாலயம் – நுகேகொட

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<