11 ஆவது முறையாக இடம்பெற்ற மஹாநாம கல்லூரி மற்றும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மஹாநாம கல்லூரியானது 24 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹாநாம கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சதீர சமரவிக்ரமவின் சதம் வீண்; போட்டியை சமப்படுத்த உதவிய சந்திமால்

அதன்படி களமிறங்கிய மேல்வரிசை வீரர்களுக்கு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பந்து வீச்சாளர்கள் தமது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அழுத்தத்தை வழங்கினர். கவிந்து முனசிங்க, பெதும் பொதேஜு மற்றும் பிஷான் மெண்டிஸ் ஆகியோர் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழக்க, மஹாநாம கல்லூரி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4 ஆவது விக்கெட்டிற்காக அவ்வணி நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் சில ஓட்டங்களை குவித்த போதிலும் நிதுக வெலிfல 7 ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்ப, 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன. அடுத்து ஆடுகளத்தில் இணைந்த அணித் தலைவர் மலிந்து மதுரங்க மற்றும் பவந்த வீரசிங்க 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியை மீட்டனர்.

மலிந்து மதுரங்க 25 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த போதிலும் மறுமுனையில் பவந்த வீரசிங்க அரைச் சதம் கடந்தார். இறுதி ஓவர்களில் பவந்த வீரசிங்கவுடன் இணைந்த ஹேஷான் நிலீக துரிதமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். இவ்விருவரின் அதிரடி காரணமாக மஹாநாம கல்லூரியானது 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பவந்த வீரசிங்க 84 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், ஹேஷான் நிலீக 53 பந்துகளில் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை விளாசினார். பந்து வீச்சில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் அணித்தலைவர் டொரின் பிடிகல 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், விஹான் குணசேகர 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

245 என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தனது முதலாவது விக்கெட்டினை 26 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் இழந்தது. தொடக்க வீரர் பசிந்து ஆதித்ய 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற ஆனந்த மற்றும் ரிச்மண்ட் கல்லூரிகள்

எனினும் இரண்டாவது விக்கெட்டிற்காக விஹான் குணசேகர மற்றும் ஷெஷாட் அமீன் 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து தமது அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹஷான் சந்தீப ஷெஷாட் அமீனை ஆட்டமிழக்கச் செய்து மஹாநாம கல்லூரிக்கு நம்பிக்கையளித்தார்.

இதனை தொடர்ந்து டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 4 விக்கெட்டுகள் 45 ஓட்டங்களிற்கு வீழ்த்தப்பட, அவ்வணி 165 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டொரின் பிடிகல மற்றும் ஷஷிக கமகே 7 ஆவது விக்கெட்டிற்காக 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும், அவ்விருவரும் முறையே 27 மற்றும் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் வெற்றிக்கனவு சிதைந்தது.

இதன்படி அவ்வணி 48.4 ஓவர்களில் 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 24 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. அசத்தலான பந்து வீச்சின் மூலம் தனி ஒருவராக டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை துவம்சம் செய்த ஹஷான் சந்தீப 50 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி: 244/8 (50)பவந்த வீரசிங்க 84, ஹேஷான் நிலீக 63*, மலிந்து மதுரங்க 25, டொரின் பிடிகல 3/48, விஹான் குணசேகர 2/41

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி: 220 (48.4)ஷெஷாட் அமீன் 62, விஹான் குணசேகர 30, டொரின் பிடிகல 27, ஷஷிக கமகே 22, ஹஷான் சந்தீப 7/50