இலங்கை மெய்வல்லுனர் சங்க நூற்றாண்டு விழா மரதன் நாளை

142

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் முதலாவது அங்கமாக நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட்டின் பூரண அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரை மரதன் மற்றும் தேகாரோக்கிய ஓட்டம் நாளை (22) நடைபெறவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்குமாக நடைபெறுகின்ற இந்த அரை மரதன் ஓட்டப்போட்டியானது பத்தரமுல்லை தியத்த உயனவுக்கு அருகில் நாளை காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவுகள் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து 15 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியா, நேபாளம் மற்றும் மாலைதீவுகளிலிருந்து தலா நான்கு வீரர்களும், பங்களாதேஷிலிருந்து மூன்று வீரர்களும் பங்குபற்றவுள்ளனர். மேலும், இலங்கையிலிருந்து சுமார் 300 வீரர்கள் வரையில் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

21 கிலோ மீற்றர் தூரமுடைய இந்த அரை மரதன்  போட்டியானது பத்தரமுல்லை தியத்த உயனவில் ஆரம்பமாகி, எத்துல் கோட்டே, பிட்ட கோட்டே, பாகொட வீதியினூடாக, நுகேகொடை ஹைலெவல் வீதி, மஹரகமை, பன்னிப்பிட்டிய பழைய வீதி, தலவத்துகொடை, பத்தரமுல்லை ஊடாக மீண்டும் தியத்த உயனவில் முடிவடையும்.

இப்போட்டியில் முதலிடத்தைப் பெறுபவருக்கு 2 இலட்சம் ரூபா பணப்பரிசும், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு முறையே ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா மற்றும் ஒரு இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

அதேபோல, 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே 75,000. 50,000 ரூபா பணப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அரை மரதன் போட்டிக்கு மேலதிகமாக, பொது மக்கள் பங்கேற்பதற்கான ஆரோக்கியத்துக்கான ஓட்டப் போட்டியொன்றை நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இந்த ஓட்டப் போட்டியானது 5 கிலோ மீற்றர் தூரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாளை நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<