இலங்கை கால்பந்து அணியுடன் இணைகிறார் வசீம்

102

ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து ஆடும் வசீம் ராசிக், இலங்கை தேசிய கால்பந்து அணியுடன் செவ்வாய்க்கிழமை (11) இணைந்துகொள்வார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை அணி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் சுற்றில் விளையாடி வருகின்றது. இதன் முதல் கட்டப் போட்டிகள் (First Leg) அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

முதல் கட்டப் போட்டிகளின் முடிவுகள்

இலங்கை 0 – 2 துர்க்மனிஸ்தான்

இலங்கை 0 – 1 வட கொரியா

தென் கொரியா 8 – 0 இலங்கை

இலங்கை 0 – 3 லெபனான்

ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை…

முதல் கட்டப் போட்டிகள் அனைத்திலும் தோல்வி கண்டுள்ள இலங்கை அணி, இரண்டாம் கட்டப் போட்டிகளை இம்மாதம் 19 ஆம் திகதி துர்க்மனிஸ்தான் அணியுடன் அவர்களது சொந்த மைதானத்தில் இடம்பெறும் மோதலுடன் ஆரம்பிக்கின்றது.

இதற்கான, இலங்கை தேசிய அணி கடந்த சில நாட்களாக நுவரெலிய சென்று விஷேட பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு, மீண்டும் கொழும்பு திரும்பி, கொழும்பில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கால்பந்து பெரிதும் எதிர்பார்த்த, ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து விளையாடும் இலங்கை வீரரான வசீம் ராசிக் நாளை இலங்கை தேசிய அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை வசீமின் தந்தை ஜமால் ராசிக் ThePapare.com இடம் உறுதிப்படுத்தினார்.

பேர்லினை மையமாகக் கொண்டுள்ள Berliner AK 07 அணிக்காக தற்போது கால்பந்து ஆடும் வசீம், நேற்று இடம்பெற்ற Wacker Nordhausen fc அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் ஜேர்மனியில் இருந்து இலங்கை நோக்கி பயணித்து, இலங்கையில் தேசிய அணியின் பயிற்சி முகாமில் அவர் 12 ஆம் திகதி இணைவார் என்று ஜமால் ராசிக் ThePapare.com இடம் குறிப்பிட்டார்.

மத்திய களம் மற்றும் முன்களம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஆடும் வசீம், Berliner AK 07 அணியின் முக்கிய வீரராக மாத்திரமல்லாது, அவ்வணிக்காக இந்த பருவகாலத்தில் பல கோல்களைப் பெற்ற வீரராகவும் உள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் சர்வதேசப் போட்டிகளில் அதிகமாக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள இலங்கை அணியின் அண்மைய போட்டி முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை. எனினும், இவ்வாறு ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து ஆடும் ஒரு வீரரின் உள்வாங்கள் இலங்கை அணிக்கு ஒரு பெரிய பக்கபலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இலங்கை அணி, உலகக் கிண்ண தகுதிகாண் மோதலுக்கு மேலதிகமாக, எதிர்வரும் நாட்களில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து கிண்ண தொடர் மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் என்பவற்றிலும் விளையாடவுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் இலங்கை அணியின் அடுத்த மோதல்கள்

துர்க்மனிஸ்தான் எதிர் இலங்கை – 2019 நவம்பர் 19 ஆம் திகதி

வட கொரியா எதிர் இலங்கை – 2020 மார்ச் 26 ஆம் திகதி

இலங்கை எதிர் தென் கொரியா – 2020 மார்ச் 31 ஆம் திகதி

லெபனான் எதிர் இலங்கை – 2020 ஜூன் 04 ஆம் திகதி

 மேலும் பல கால்பந்து  செய்திகளைப் படிக்க