விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணம் ஏழாவது முறையாக சென்றலைட்ஸ் வசம்

146
Vipulananthan memorial basketball

16ஆவது பொன். விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் 51:63 என்ற புள்ளிகளடிப்படையில் ஜோலி ஸ்ரார்ஸ் அணியினை வெற்றி கொண்ட சென்றலைட்ஸ் அணி தொடர்ச்சியாக 7ஆவது முறையாகவும் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.

யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவமுதல்வன் மறைந்த விபுலானந்தன் அவர்களது ஞாபகார்த்தமாக, சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் வட மாகாண ரீதியாக நடாத்திய கூடைப்பந்தாட்டத்  தொடரில் 07 அணிகள் பங்கெடுத்திருந்தன.

போட்டித் தொடரானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (1ஆம் திகதி) ஆரம்பமாகி, 3ஆம் திகதி ஞாயிரன்று நிறைவிற்கு வந்திருந்தது.  முதலாவது சுற்றிற்காக குழு “A”இல் ஜோலி ஸ்ரார்ஸ், K.C.C.C, யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா அணிகளும், குழு “B”இல் பற்றீசியன்ஸ், சென்றலைட்ஸ் மற்றும் ஸ்கந்தா ஸ்ரார் ஆகிய அணிகளும் மோதியிருந்தன.

விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம்

நேற்று நிறைவடைந்த பாடசாலை..

குழு நிலைப் போட்டிகளில் முதலிரு இடங்களைப் பிடித்த ஜோலி ஸ்ரார்ஸ், K.C.C.C, சென்றலைட்ஸ் மற்றும் பற்றீசியன்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தன.

முதல் அரையிறுதி

பற்றீசியன்ஸ் மற்றும் ஜொலி ஸ்ரார்ஸ் அணிகள் மோதியிருந்த இப் போட்டியில் முதலாவது காற்பகுதியில் 12:10 என்ற புள்ளிகளடிப்படையில்  முன்னிலை பெற்றது ஜொலி ஸ்ரார்ஸ். அடுத்த காற்பகுதியில்  சிறப்பாக ஆடிய பற்றீசியன் அணி 18 புள்ளிகளை சேகரித்து 28:22 என்ற புள்ளிகளடிப்படையில் முதற்பாதியில் முன்னிலை பெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற மூன்றாவது காற்பகுதியினை 16:14 என்ற புள்ளிகளடிப்படையில் ஜோலிஸ்ரார்ஸ் கைப்பற்றியபோதும், பற்றீசியன்ஸின் முன்னிலை தொடர்ந்தது.

இறுதிக் காற்பகுதியில் பற்றீசியன்ஸின் ஆட்டத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்திய ஜோலி ஸ்ரார்ஸ் கபிலன், தயாகவன் ஆகியோரின் சிறப்பாட்டம் மூலம் 22 புள்ளிகளை சேகரித்தது. பதிலுக்கு பற்றீசியன்சால் 07 புள்ளிகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது.  

இதன் காரணமாக ஆட்டத்தின் முடிவில் 59:49 என்ற புள்ளிகளடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் தமது இடத்தினைப் பதிவு செய்தது ஜோலி ஸ்ரார்ஸ் அணி.  

இரண்டாவது அரையிறுதி  

சென்றலைட்ஸ் மற்றும் K.C.C.C அணிகள் மோதியிருந்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டத் தொடங்கியது சென்றலைட்ஸ். 41:22 என்ற புள்ளிகளடிப்படையில் முதற் பாதியிலேயே முன்னிலை பெற்றது சென்றலைட்ஸ்.

தமது அணியினை முன்னிலைப்படுத்த K.C.C.C அணி போராடிய போதும் தொடர்ந்தும் அபாரமாக ஆடிய சென்றலைட்ஸ் 74:54 என்ற புள்ளிகளடிப்படையில் இலகு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.  

இறுதிப் போட்டி

விபத்தின் காரணமாக அண்மையில் அகால மரணமடைந்த ஏஞ்சல் பன்னாட்டுப் பாடசாலையினுடைய கூடைப்பந்தாட்ட வீரர் அடம் நெல்சன் அலோசியஸ் லியொனார்டோ அவர்களை நினைவுகூரும் முகமாக மௌன அஞ்சலியுடன் இந்த இறுதிப் போட்டி ஆரம்பமானது.

தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட தொடரில் புனித மைக்கல் கல்லூரிக்கு மூன்றாமிடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம்…

சென்றலைட்சின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எதிர்பார்ப்பில் களம் நுழைந்த ஜோலி ஸ்ரார்சிற்கு முதற் காற் பகுதியிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

முதற்காற்பகுதியினை 19:13 என தமதாக்கியது சென்றலைட்ஸ். அடுத்த காற்பகுதியிலும் அபார ஆட்டத்தினை தொடர்ந்த சென்றலைட்ஸ் 36:25 என்ற புள்ளிகளடிப்படையில் முதற்பாதியினை தமதாக்கினர்.   

தொடர்ந்தும் அபாரம் காண்பித்த சென்றலைட்ஸ் அணி வீரர்கள் மூன்றாவது காற்பகுதியிலும் 16 புள்ளிகளை சேர்த்த போதும் ஜோலி ஸ்ரார்ஸ் அணியினர் 12 புள்ளிகளை மட்டுமே சேகரித்தனர்.     

இறுதிக் காற்பகுதியில் சென்றலைட்ஸ் 09 புள்ளிகள் சேகரித்தவேளை ஜோலி ஸ்ரார்ஸ் 14 புள்ளிகளை சேகரித்தது. எனினும், ஆட்ட நேர நிறைவில் 63:51 என்ற புள்ளிகளடிப்படையில் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி  தொடர்ச்சியாக 7ஆவது முறையாக பென் விபுலானந்தன் நினைவுக் கிண்ணத்தினை தமதாக்கியது.

பற்றீசியன்ஸ், K.C.C.C அணிகளுக்கிடையிலான முன்றாம் இடத்திற்கான போட்டியின் முதற்பாதி ஆட்ட நிறைவில் 30:16 என்ற புள்ளிகளடிப்படையில் பற்றீசியன்ஸ் அணி முன்னிலை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதன் காரணமாக பிறிதொரு தினத்திற்கு போட்டி பிற்போடப்பட்டுள்ளது.