பொலிஸை வீழ்த்திய நடப்புச் சம்பியன் இராணுவ அணி எப்.ஏ கிண்ண இறுதி மோதலில்

425

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை பொலிஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் இம்முறையும் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற காலிறுதியில் பொலிஸ் அணி, ரினௌன் அணியை பெனால்டியில் 3-1 என வெற்றி கொண்டதன் மூலமும், இராணுவப்படை அணி இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டுக் கழக அணியை 2-1 எனவும் வெற்றி கொண்டு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்த அரையிறுதி மோதலுக்கு தகுதி பெற்றிருந்தன.

தினேஷின் சிறந்த தடுப்பால் ரினௌனுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்

சுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான….

இலங்கை இராணுவப்படை முதல் பதினொருவர்

ரொஷான் அப்புஹாமி (தலைவர்), மொஹமட் லுத்பி (கோல் காப்பாளர்), கீர்த்தி குமார, பன்டார வரகாகொட, லக்ஷித ஜயதுங்க, எரங்க பிரியஷாந்த, மொஹமட் இஸ்ஸடீன், மதுஷான் டி சில்வா, ஜயசுராஸ் பேனார்ட், அசிகுர் ரஹ்மான், நிரோஷான் பதிரன,

இலங்கை பொலிஸ் முதல் பதினொருவர்

ஷாமிக குமார (தலைவர்), கே. லங்கேஷ்வர, சம்பத் பதிரன, நுவந்த ஷாரக, குமார, தனுஷ பெரேரா, மஹேந்திரன் தினேஷ் (கோல் காப்பாளர்), சதுர குனரத்ன, ஆர். மொஹமட், மொஹமட் சுபைக், ரியாஸ் அஹமட்

ஆட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களில் பொலிஸ் அணியின் அனுபவ வீரர் சதுர குனரத்ன நீண்ட தூரத்தில் இருந்து கோல் நோக்கி எடுத்த முயற்சியின்போது பந்து கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் பொலிஸ் வீரர் ஆர்.மொஹமட் மைதானத்தின் மத்தியில் சிறந்த முறையில் பந்தை ஹெடர் மூலம் பெற்று, முன்னோக்கி எடுத்துச் சென்று கோல் நோக்கி எடுத்த முயற்சியின்போது, பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

அடுத்த நிமிடங்களில் இராணுவப்படை முன்கள வீரர் மதுஷான் டி சில்வா மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்று எதிரணியின் பெனால்டி எல்லைவரை எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்தை கோல் காப்பாளர் தினேஷ் பிடித்தார்.

எப்.ஏ கிண்ண அரையிறுதிக்கு செல்லும் முதல் அணியாக இராணுவப்படை

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியில் இலங்கை போக்குவரத்து சபை….

மீண்டும் 20ஆவது நிமிடம் மதுஷான் டி சில்வா கோலுக்கு நேர் எதிரே மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தையும் தினேஷ் பாய்ந்து வெளியே தட்டினார்.

ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணியின் கோல் எல்லைக்கு வெளியில் இடது புறத்தில் இருந்து கோல் திசைக்கு செலுத்திய பந்தை கோல் காப்பாளர் தினேஷ் தடுக்க வந்தார். இதன்போது பொலிஸ் பின்கள வீரர் தனுஷ பெரேராவின் கால்களில் பட்ட பந்து கோலுக்குள் செல்ல, ஓன் கோல் முறையில் இராணுவப்படை அணி முதல் கோலைப் பெற்று முன்னிலையடைந்தது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து ரியாஸ் அஹமட் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற ஆர். மொஹமட் கோலுக்குள் அடித்த பந்தை லுத்பி பிடித்தார்.

மீண்டும் 40ஆவது நிமிடத்தில் ஒரு திசையில் இருந்து பந்தை எடுத்து வந்த அசிகுர் ரஹ்மான் இரண்டு வீரர்களுக்கு இடையினால் சுராஜ் பேனார்டிற்கு வழங்கிய பந்தை, பேனார்ட் கோல் நோக்கி உதைகையில் வேகமாக வந்த பந்தை தினேஷ் பிடித்தார்.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 1 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி மூன்று நிமிடங்களில் பொலிஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த சபீர் ரசூனியா மத்திய களத்தில் இருந்து மொஹமடுக்கு வழங்கிய பந்தை அவர் கோல் எல்லைவரை எடுத்துச் சென்று, பின்கள வீரரிடமிருந்து பந்தை தனிமைப்படுத்தி கோல் நோக்கி உதைய, பந்து இடதுபுற கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

மீண்டும் அடுத்த நிமிடம் இராணுவப்படை வீரர் மதுஷான் டி சில்வா கோலுக்கு அண்மையில் இருந்து கோலுக்குள் செலுத்திய பந்தை தினேஷ் பிடிக்க, பந்து அவரது கையில் இருந்து நழுவியது. அதனை அவர் மீண்டும் கோல் எல்லையில் இருந்து பிடித்துக்கொண்டார்.

>>புகைப்படங்களைப் பார்வையிட<< 

52 நிமிடங்கள் கடந்த நிலையில் இஸ்ஸடீன் பொலிஸ் அணியின் எல்லையின் வலது புறத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை தினேஷ் கோலுக்கு அண்மையில் இருந்து பாய்ந்து கம்பங்களுக்கு மேலால் தட்டி வெளியேற்றினார்.

பொலிஸ் அணியின் இடது புறத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை இராணுவ அணிக்கு மாற்று வீரராக வந்த கசுன் பிரதீப் இஸ்ஸடீனுக்கு ஹெடர் செய்தார். இதன்போது கோல் காப்பாளருடன் தனிமையில் இருந்த இஸ்ஸடீன் ஹெடர் செய்த பந்து கோலைவிட உயர்ந்து வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் இராணுவப்படை மத்திய களத்தில் இருந்து சம்பத் பதிரன உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை சபீர் ஹெடர் செய்ய, ஒரு பக்க கம்பத்தை அண்மித்த வகையில் பந்து வெளியே சென்றது.  

தொடர்ந்து, எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து இஸ்ஸடீன் கோல் நோக்கி உதைந்த பந்து வலது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே செல்ல, அவரது அடுத்த வாய்ப்பும் வீணானது.

அதே நேரம், எதிரணியின் கோல் எல்லையில் இருந்து மொஹமட் கோல் நோக்கி உதைந்த பந்து பின்கள வீரரின் உடம்பில் பட்டு வர, மீண்டும் சபீர் கோல் நோக்கி உதைந்த பந்தை கோல் காப்பாளர் லுத்பி பிடித்தார்.

அரங்கே அதிர்ந்த ஆட்டத்தில் ஸாஹிராவை பெனால்டியில் வென்றது புனித பத்திரிசியார்

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி….

அதன் பின்னர் பொலிஸ் வீரர்கள் நீண்ட தூரத்தில் இருந்து கோல் நோக்கி எடுத்த முயற்சிகள் அனைத்தையும் கோலுக்கு அண்மையில் இருந்து லுத்பி பிடித்தார்.

போட்டியின் மேலதிக நேரத்தில் மீண்டும் இஸ்ஸடீன் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து கோலுக்கு எடுத்த முயற்சியின்போது, தினேஷைத் தாண்டி பந்து கோலுக்குள் செல்லும்போது பொலிஸ் பின்கள வீரர் அதனைத் தடுத்தார்.

எனவே, இறுதிவரை இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடிய இந்த ஆட்டத்தில் ஓன் கோல் மூலம் பெற்ற கோலினால் இராணுவப்படை அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 1 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம்  – தனுஷ பெரேரா (ஓன் கோல்) 28’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<