எல்.பி. பினான்ஸ் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த தனன்ஞய டி சில்வா

573

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒரு நாள் தொடரில், மூன்று போட்டிகள் (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த போட்டிகளில் தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் பலர் தமது திறமையை வெளிக்காட்டியிருந்தனர்.

டீஜேய் லங்கா எதிர் கொமர்ஷல் கிரடிட் (A)

மக்கோன சர்ரே மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில், கொமர்ஷல் கிரடிட் அணி 4 விக்கெட்டுக்களால் டீஜேய் லங்கா அணியை தோற்கடித்தது.

வர்த்தக நிறுவன கிரிக்கெட்டில் அதிரடி சதம் பெற்ற குசல் மெண்டிஸ்

முன்னதாக, போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொமர்ஷல் கிரடிட் அணி முதலில் டீஜேய் லங்கா அணியை துடுப்பாடுமாறு பணித்தனர். இதன்படி,  தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த டீஜேய் லங்கா வீரர்கள் சவாலான இலக்கு ஒன்றினை தமது தரப்பிற்கு நிர்ணயிக்க தவறினர். அந்தவகையில் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த டீஜேய் லங்கா அணி 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. அவ்வணிக்காக லசித் குரூஸ்புள்ளே 58 ஓட்டங்களைப் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். இதேநேரம், கொமர்ஷல் கிரடிட் அணியின் பந்துவீச்சிற்காக சத்துரங்க டி சில்வா மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 207 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொமர்ஷல் கிரடிட் அணி, தேசிய அணி வீரர் வனிது ஹஸரங்கவின் அபார அரைச்சதத்தோடு 38.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. கொமர்ஷல் கிரடிட் அணியின் வெற்றிக்கு உதவிய ஹஸரங்க 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார். இதேநேரம், லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி டீஜேய் லங்கா அணிக்கு உதவிய போதிலும் அது வெற்றிக்கு போதுமாக அமையவில்லை.

போட்டியின் சுருக்கம்

டீஜேய் லங்கா – 206 (47.3) – லசித் குரூஸ்புள்ளே 58, சச்சித்ர சேரசிங்க 34, சத்துரங்க டி சில்வா 3/30, சாமிக்க கருணாரத்ன 3/42

கொமர்ஷல் கிரடிட் – 209/6 (38.5) – வனிது ஹஸரங்க 73*, லஹிரு மதுஷங்க 34*, லக்ஷான் சந்தகன் 2/61

முடிவு – கொமர்ஷல் கிரடிட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி


எல்.பி. பினான்ஸ் எதிர் மாஸ் சிலுயேட்டா (A)

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், எல்.பி. பினான்ஸ் அணி மாஸ் சிலுயேட்டா அணியை 138 ஓட்டங்களால் தோற்கடித்து அபார வெற்றியை பதிவு செய்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய எல்.பி. பினான்ஸ் அணி, தனன்ஞய டி சில்வா மற்றும் சஹான் அராச்சிகே ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களைக் குவித்தது. தனன்ஞய டி சில்வா அரைச்சதம் தாண்டி 72 ஓட்டங்களையும், சஹான் ஆராச்சிகே ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இதேவேளை இஷார ஹேமந்த 3 விக்கெட்டுக்களை மாஸ் சிலுயேட்டா அணிக்காக கைப்பற்றியிருந்தார்.

ஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

இதனை அடுத்து, போட்டியின் வெற்றி இலக்கை (294) நோக்கி துடுப்பாடிய மாஸ் சிலுயேட்டா அணி, 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 155 ஓட்டங்களை மட்டுமே குவித்து போட்டியில் படு தோல்வியடைந்தது. எல்.பி. பினான்ஸ் அணியின் பந்துவீச்சில் சரித் சுதாரக்க 4 விக்கெட்டுக்களையும், அஞ்செலோ பெரேரா 3 விக்கெட்டுக்களையும், ஏற்கனவே அரைச்சதம் பெற்ற தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வெற்றிக்கு பங்களிப்புச் செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

எல்.பி. பினான்ஸ் – 293/9 (50) – தனன்ஞய டி சில்வா 72, சஹான் ஆராச்சிகே 66*, இஷார ஹேமந்த 3/35

மாஸ் சிலுயேட்டா – 155 (44.1) – சங்கீத் கூரே 28, சரித் சுதாரக்க 4/26, அஞ்செலோ பெரேரா 3/25, தனன்ஞய டி சில்வா 2/26

முடிவு – எல்.பி. பினான்ஸ் அணி 138 ஓட்டங்களால் வெற்றி


டிமோ எதிர் ஹேலீஸ்

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், டிமோ அணி 44 ஓட்டங்களால் ஹேலீஸ் நிறுவன அணியை தோற்கடித்தது.

முன்னதாக எதிரணியினால் போட்டியில் துடுப்பாட பணிக்கப்பட்ட டிமோ அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை குவித்தது. டிமோ அணியின் சார்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் அரைச்சதம் தாண்டி 89 ஓட்டங்களைக் குவித்து சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதேநேரம், ஹேலீஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் பினுர பெர்னாந்து மற்றும் சானக்க ருவன்சிரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 216 ஓட்டங்கள் கடின இலக்கு இல்லை என்ற போதிலும், அதனை பெற ஹேலீஸ் அணி தடுமாறியது. அவ்வணிக்கு ரொன் சந்திரகுப்தா மாத்திரம் 70 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் தந்த நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் ஹேலீஸ் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டும் பெற்று டிமோ அணியிடம் போட்டியில் தோல்வியைத் தழுவியது. டிமோ அணி சார்பில் கவிஷ்க அஞ்சுல, மதீஷ பெரேரா மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் பதம்பார்த்து தமது தரப்பிற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர்.

போட்டியின் சுருக்கம்

டிமோ – 215 (46.2) – தினேஷ் சந்திமால் 89, நிப்புன் கருணாநாயக்க 37, பினுர பெர்னாந்து 3/14, சானக்க ருவன்சிரி 3/43

ஹேலீஸ் நிறுவனம் – 171 (42) – ரொன் சந்திரகுப்தா 70, கவிஷ்க அஞ்சுல 2/14, மதீஷ பெரேரா 2/25

முடிவு – டிமோ அணி 44 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<