நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி மூன்றாமிடம்

107

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 6-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது இடத்தை சுவீகரித்தது.

இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்த புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான 3 ஆவது இடத்தை தீர்மானிக்கும் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் இன்று (26) நடைபெற்றது. இதில் புனித ஜோசப் கல்லூரி சார்பில் மூன்று கோல் உதவிகள் மற்றும் ஒரு கோலை பெற்ற செனால் சந்தேஷ் அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஸாஹிரா – புனித பேதுரு கல்லூரிகளின் இறுதிப் போட்டி நாளை

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம்…

போட்டியின் ஆரம்பத்தில் தனது நுட்பமான ஆட்டத்தின் மூலம் எதிரணி கோல் பகுதியை புனித ஜோசப் கல்லூரி அடிக்கடி ஆக்கிரமித்தது. 8 ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் கல்லூரிக்கு ப்ரீ கிக் கிடைத்தபோது அந்த அணிக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பாக அது இருந்தது. எனினும் கோலை நோக்கிச் சென்ற பந்தை கடைசி நேரத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி கோல்காப்பாளர் தடுத்தார்.

தொடந்து 12 ஆவது நிமிடத்திலும் புனித ஜோசப் கல்லூரிக்கு ப்ரீ கிக் கிடைத்தது. இம்முறை அந்த அணி தனது வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது. எதிரணி பெனால்டி பெட்டிக்குள் செலுத்தப்பட்ட பந்தை சச்சிந்தக பெரேரா கோலை நோக்கி உதைத்தபோதும் கோல்காப்பாளர் பந்தை தடுத்தாலும் கட்டுப்பாட்டை இழந்து கோல் எல்லையைத் தாண்டிச் சென்றார். எனினும் அது ஒரு சர்ச்சைக்குரிய கோலாகவே இருந்தது.

இதனைத் தொடர்ந்து செயற்பட்ட புனித ஜோசப் கல்லூரியின் முன்கள வீரர் செனால் சந்தேஷ் பந்தை வேகமாகக் கடத்திச் சென்று பெனால்டி பெட்டிக்குள் காவிந்த ரூபசிங்கவிடம் வழங்க அவர் நெருக்கடி இன்றி 19 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தினார்.

இந்நிலையில் முதல் பாதியின் நடுவே வழங்கப்பட்ட தண்ணீர் இடைவேளைக்குப் பின் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வீரர்களிடையே உற்சாகம் பிறந்தது. புனித ஜோசப் கல்லூரி கோல் பகுதிக்குள் அடிக்கடி பந்தை செலுத்திய அந்த அணியினர் பல கோனர் கிக் வாய்ப்புகளையும் பெற்றனர்.

அவ்வாறான கோனர் கிக் ஒன்றின் போது புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் பந்து வலைக்குள் செல்லாமல் தடுத்தபோதும் நடுவரால் சர்ச்சைக்குரிய முறையில் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறான அந்த ஸ்பொட் கிக்கைக் கொண்டு ஜோன் லோயாஸ் 34 ஆவது நிமிடத்தில் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.

ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் செயற்பட்ட லோயாஸ், கிறிஸ்டீபன் சிறப்பாக பரிமாற்றிய பந்தை மெதுவாக முன்னோக்கி செலுத்தி நிதானமாக இடது பக்கமாக உதைத்து இரண்டாவது கோலை பெற்றார்.

போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை பெற்றிருந்தவேளை இந்தத் தொடரில் அதிக கோல் பெற்றவரான செனால் சந்தேஷ் தனது அபார ஆட்டத்தினால் புனித ஜோசப் கல்லூரிக்கு கோல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். எதிரணி பெனால்டி பெட்டிக்கு அருகில் இரு பின்கள வீரர்களை முறியடித்து கோலை நோக்கி அவர் மின்னல் வேகத்தில் உதைத்த பந்து புனித பத்திரிசியார் கல்லூரி கோல்காப்பாளரிடம் இருந்து நழுவிச் செல்ல எவான் வொலஸ் அதனை வலைக்குள் தட்டிவிட்டார்.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 3 – 2 புனித பத்திரிசியார் கல்லூரி  

இரண்டாவது பாதியில் புனித பத்திரிசியார் கல்லூரி சில கோல் வாய்ப்புகளை பெற்றபோதும் கடைசி 45 நிமிடங்களிலும் புனித ஜோசப் கல்லூரியே ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக செனால் சந்தேஷை கட்டுப்படுத்துவதற்கு புனித பத்திரிசியார் கல்லூரி பின்கள வீரர்கள் போராட வேண்டி இருந்து. 49 மற்றும் 58 ஆவது நிமிடங்களில் அவர் பந்தை தனியே வேகமாக எடுத்துவந்து வலையை நோக்கி உதைத்தபோது எதிரணி கோல்காப்பாளர் சதீஷ் போராடித் தடுத்தார்.

இந்நிலையில் 79 ஆவது நிமிடத்தில் சலன பிரமந்த இடது பக்கமாக இருந்து நேர்த்தியாக பரிமாற்றிய பந்தை பதில் வீரர் எவான் வொலஸ் வலைக்குள் செலுத்தினார்.

தொடர்ந்து 86 ஆவது நிமிடத்தில் பெனல்டி பெட்டிக்கு நெருக்கமாகக் கிடைத்த ப்ரீ கிக்கை பெற்ற செனால் சந்தேஷ் அதனை உயர உதைத்து எதிரணி கோல் காப்பாளருக்கு பிடிக்க முடியாத வகையில் கோலாக மாற்றினார். இது இந்தத் தொடரில் அவர் பெறும் 11 ஆவது கோலாகும்.

வெற்றி உறுதியான நிலையில் மேலதிக நேரத்தில் எவான் வொலஸ் தனது ஹெட்ரிக் கோலை பதிவுசெய்தார். கோல் கம்பத்திற்கு நெருக்கமாக இருந்து மீண்டும் ஒருமுறை சிறப்பாக செயற்பட்ட செனால் சந்தேஷ் வழங்கிய பந்தை எவான் வொலஸ் கோலாக மாற்றினார்.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 6 – 2 புனித பத்திரிசியார் கல்லூரி  

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – சச்சிந்தக பெரேரா 12’, காவிந்த ரூபசிங்க 20’, எவான் வொலஸ் 44’, 79’ & 94+1’, செனால் சந்தேஷ் 86’

புனித பத்திரிசியார் கல்லூரி ஜோன் லோயாஸ் 34’(பெனால்டி), & 35’

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க