இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ முதல்தர கிரிக்கெட் தொடரின் கடைசி வார இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (22) நடைபெற்றது.
கொழும்பு எதிர் தம்புள்ளை
குசல் பெரேரா மற்றும் மனோஜ் சரத்சந்திரவின் துடுப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணிக்கு எதிராக தம்புள்ளை அணி வலுவான நிலையில் உள்ளது. இதில் ஐ.பி.எல். வாய்ப்பை கைவிட்டு இலங்கை முதல்தர போட்டியில் களமிறங்கியிருக்கும் குசல் பெரேரா நீண்ட போட்டிகளில் ஆடும் தனது திறமையை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரொஷேன், சானக்க ஆகியோரின் துடுப்பாட்டத்துடன் காலி அணி வலுவான நிலையில்
இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில்…
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது வேகப்பந்து வீச்சாளர் லஹிரு மதுஷான் தம்புள்ளை அணிக்காக 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தம்புள்ளை அணிக்கு குசல் பெரேரா கைகொடுத்தார். 13 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவர் தனது பாணியில் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.
லக்ஷான் சதகன் வீசிய நொபோல் பந்தொன்றுக்கு சிக்ஸர் விளாசிய குசல் பெரேரா தொடர்ச்சியாக பௌண்டரிகளை பெற்று ஓட்டங்களை அதிகரித்தார். 91 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 85 ஓட்டங்களை பெற்றநிலையில் சதகனின் பந்துக்கு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
குசல் பெரேரா 2017 பெப்ரவரிக்கு பின்னரே முதல்தர போட்டிகளில் களமிறங்கியுள்ளார். எனினும் தனது திறமையை வெளிக்காட்டி இருக்கும் அவர் இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்க தனது தகுதியை நிரூபித்துள்ளார்.
முரளியின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் பதிலடி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…
இந்நிலையில் மத்திய வரிசையில் வந்த தம்புள்ளை விக்கெட் காப்பாளர் மனோஜ் சரத்சந்திர முதல்தர போட்டிகளில் தனது 6ஆவது சதத்தை பெற்றார். 181 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகளுடன் 103 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் தம்புள்ளை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 84.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 359 ஓட்டங்களை பெற்றது. இதன்போது கொழும்பு அணிக்காக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிலேஷ் குணரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது நாளின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி ஆட்ட நேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களை பெற்றுள்ளது. கௌஷால் சில்வா 9 ஓட்டங்களுடனும் செஹான் ஜயசூரிய 24 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
காலி எதிர் கண்டி
இளம் சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸின் அதிரடி பந்துவீச்சு மூலம் கண்டி அணியை 185 ஓட்டங்களுக்கே சுருட்டிய காலி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளனர்.
அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் 344 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த காலி அணி தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC)…
குறிப்பாக அந்த அணியின் மத்திய வரிசை வீரர் ரொஷேன் சில்வா தனது ஓட்டங்களை மேலும் அதிகரித்துக் கொண்டார். 100 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை தொடங்கிய அவர் 295 பந்துகளில் 16 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 168 ஓட்டங்களை குவித்தார். 2018ஆம் ஆண்டு ரொஷேன் சில்வா ஆடிய 13 முதல்தர இன்னிங்ஸ்களிலும் 4 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்களோடு 963 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு இதன் ஓட்ட சராசரி 107 என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காலி அணித்தலைவர் தசுன் ஷானக்க 90 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார்.
இதன்படி காலி அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றது. கண்டி அணி சார்பில் இடதுகை சுழல் வீரர் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி 12 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்ததோடு அடுத்தடுத்து விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இதன்போது நிஷான் பீரிஸ் கண்டி அணியின் முதல் ஐந்து ஆரம்ப வரிசை வீரர்களில் நால்வரை அரங்கு திரும்பச் செய்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
காயத்தில் இருந்து மீண்டு முதல்தர போட்டிகளில் களமிறங்கிய கண்டி அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு மத்திய வரிசையில் வந்த விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல பெற்ற 39 ஓட்டங்களுமே கண்டி அணியின் அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இதன்மூலம் கண்டி அணி 41.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களையே பெற்றது. அபாரமாக பந்து வீசிய 20 வயதான நிஷான் பீரிஸ் 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இதன்படி முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களால் முன்னிலைபெற்ற காலி அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இன்றைய தினத்தில் மேலும் 5 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் காலி விக்கெட் இழப்பின்றி ஒரு ஓட்டத்தை பெற்றது. லஹிரு மலிந்த ஓட்டமின்றியும் மாதவ வர்ணபுர ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
ஏற்கனவே இந்த மாகாண மட்ட தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் காலி அணிக்கு இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















