இளையோர் ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியிலும் மொஹமட் சமாஸ்

171

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் நாளை ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரில் ஆடவுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் இன்று (29) அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி முன்னதாக இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது.

இலங்கை இளம் அணியில் சமாஸ், வியாஸ்காந்த் இணைப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷின்…

குறித்த இளையோர் டெஸ்ட் தொடர் 1-1 என கடந்த வாரம் சமநிலையில் நிறைவுற, பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி தமது இலங்கை சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாக இலங்கையின் இளம் கிரிக்கெட் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரில் மோதுகின்றது.

இந்த இளையோர் ஒரு நாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக் குழாத்தில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மொஹமட் சமாஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை 19 வயதின் கீழ் அணியின் ஒரு நாள் குழாத்தில் முதற்தடவையாக வாய்ப்பினைப் பெற்றுள்ள சமாஸ், இதற்கு முன்னர் பங்களாதேஷின் இளம் அணியுடன் இடம்பெற்ற இளையோர் டெஸ்ட் தொடரிலும் இலங்கையின் 19 வயதின் கீழ் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்த இளையோர் ஒரு நாள் தொடரில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்படும் பொறுப்பு வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரரான நிப்புன் தனன்ஞயவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் போட்டியை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்த இலங்கை இளம் அணி

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை…

நிப்புன் தனன்ஞயவின் கீழான இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இளையோர் ஒரு நாள் போட்டிகளாக அண்மையில் நடைபெற்று முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக ஆடியிருந்த நவோத் பரணவிதான, காமில் மிஷார, சந்துன் மெண்டிஸ் மற்றும் நவின் பெர்னாந்து ஆகிய வீரர்களும் பங்களாதேஷின் இளம் அணிக்கெதிரான இளையோர் ஒரு நாள் தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கையின் இளம் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த யாழ். மத்திய கல்லூரி வீரர் செல்வராசா மதுசன் மற்றும் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த விஜயகான்த் வியாஸ்கான்த் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், பங்களாதேஷின் இளம் அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த இளையோர் டெஸ்ட் தொடரில் சதம் பெற்ற சோனால் தினுஷ, பந்துவீச்சில் ஜொலித்த ரோஹான் சஞ்சய ஆகியோரும் இளையோர் ஒரு நாள் குழாத்தில் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க…

இலங்கையின் இளம் கிரிக்கெட் அணி 2020ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்குபெறும் வீரர்களை இந்த பங்களாதேஷ் சுற்றுப் பயணப் போட்டிகளின் மூலமே தெரிவு செய்யவுள்ளது. எனவே, சில புதுமுக வீரர்களுக்கும் பங்களாதேஷுக்கு எதிரான இளையோர் ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இளையோர் ஒரு நாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, இறுதி இரண்டு போட்டிகளும் கட்டுநாயக்க மேரியன்ஸ் கழக மைதானத்தில் இடம்பெறுகின்றன.

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

காமில் மிஷார, நவோத் பரணவிதான, ரவிந்து ரஷான், நிப்புன் தனன்ஞய (அணித்தலைவர்), சோனால் தினுஷ, மொஹமட் சமாஸ், அவிஷ்க தரிந்து, ரவின் டீ சில்வா, சந்துன் மெண்டிஸ், லக்ஷான் கமகே, M.C. பிரேமதாச, ரோஹான் சஞ்சய, சமிந்து விஜேசிங்க, நவின் பெர்னாந்து, அஷான் டேனியல்

ஒரு நாள் தொடர் அட்டவணை

ஒக்டோபர் 30 – முதலாவது இளையோர் ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை

நவம்பர் 1 – இரண்டாவது இளையோர் ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை

நவம்பர் 3 – மூன்றாவது இளையோர் ஒரு நாள் போட்டி, ரங்கிரி தம்புள்ளை

நவம்பர் 6 – நான்காவது இளையோர் ஒரு நாள் போட்டி, மேரியன்ஸ் கட்டுநாயக்க

நவம்பர் 9 – ஐந்தாவது இளையோர் ஒரு நாள் போட்டி, மேரியன்ஸ் கட்டுநாயக்க

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க