கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ள இலங்கை
தொடர்ச்சியாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த ரோரி பேர்ன்ஸ் 14 ஓட்டங்களுடன், டில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரை அடுத்து மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கீடொன் ஜென்னிங்ஸ் 14 ஓட்டங்களுடன் வெளியேற, இங்கிலாந்து அணி 36 ஓட்டங்களுக்கு தங்களுடைய இரண்டாவது விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் நிதானமாக துடுப்பாடி அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றைப் பெற, போட்டியின் மதிய போசண இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது.
இதில் இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் டில்ருவான் பெரேரா மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அதே நேரம் தவறான DRS மேன் முறையீட்டை முன்வைத்திருந்த இலங்கை அணி, மதிய போசண இடைவேளைக்கு முன்னர் தங்களுடைய இரண்டு DRS வாய்ப்புகளையும் இழந்தது.
மதிய போசண இடைவேளைக்குப் பின்னர் தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் ஜோ ரூட் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் 100 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற, ஜோ ரூட் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எவ்வாறாயினும், ஜொனி பெயார்ஸ்டோவ் தனது அரைச் சதத்தை கடந்து, பென் ஸ்டோக்ஸுடன் மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார்.
இருவரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை நிதானமாக உயர்த்த தேநீர் இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 197 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்தது.
தொடர்ந்து பலமான நிலையில் தேநீர் இடைவேளைக்கு பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜோனி பெயார்ஸ்டோவ், தனது 6 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ய, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களை பெற்று, லக்ஷான் சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லக்ஷான் சந்தகன் ஜோனி பெயார்ஸ்டோவை 110 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். அடுத்துவந்த ஜோஸ் பட்லரின் (17) விக்கெட்டை சந்தகன் கைப்பற்ற, பென் போக்ஸின் விக்கெட்டை மலிந்த புஷ்பகுமார கைப்பற்றினார்.
Photos : Sri Lanka Vs. England | 3rd Test | Day 1
எனினும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மொயீன் அலி 23 ஓட்டங்களையும், ஆதில் ரஷீட் 13 ஓட்டங்களையும் ஆட்டமிழக்கமால் பெற்றிருக்க, நடுவர்கள் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியை இடைநிறுத்தியதுடன், ஆட்டநேரத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் அறிவித்தனர்.
இதன்படி, இங்கிலாந்து அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 88.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை லக்ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<