கட்டாய வெற்றிக்காக ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

1492
Image Courtesy - ICC

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று (15) ஆரம்பமாகிய 14 ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் மிகவும்  மோசமான தோல்வி ஒன்றினைச் சந்தித்த இலங்கை அணி, ஆசியக் கிண்ணத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனின், நாளை (16) குழு B இன் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்படுகிறது.

மாலிங்கவின் பந்துவீச்சு வீண்; ஆசிய கிண்ண முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

ஆசியக் கிண்ணத் தொடரின், 14 ஆவது…

அந்த வகையில் அபுதாபி நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த தீர்மானமிக்க போட்டி பற்றிய முன்னோட்டமே இது.

போட்டியின் விபரங்கள்

இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்

இடம் – ஷேக் சயேத் மைதானம், அபு தாபி
திகதி, நேரம் – செப்டம்பர் 17 (திங்கட்கிழமை), மாலை 5 மணி (இலங்கை நேரப்படி)

  • இரு அணிகளதும் கடந்த காலம், நிகழ்காலம்

கடந்த 2018 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெறுகின்றது. கடந்த காலத்தினைப் பார்க்கும் போது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கின்றன. இதில் ஒரு போட்டி, 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் ஒரு அங்கமாகவும், மற்றைய போட்டி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் அங்கமாகவும் அமைந்திருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியினை பதிவு செய்ய, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களின் பின்னர் இரண்டு அணிகளும் ஆசியக் கிண்ணத் தொடர் மூலம் மீண்டும் ஒரு நாள் போட்டியொன்றில் மோதுகின்றன.

ஒரு நாள் போட்டிகளாக இடம்பெறும் இம்முறைக்கான ஆசியக் கிண்ணத்தில் இரண்டாவது தடவையாகவே பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முன்னர் குழு நிலைப் போட்டிகளுடனேயே தொடரை நிறைவு செய்திருந்தது. இதேவேளை, ஐந்து தடவைகள் இலங்கை அணி ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவை ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் சரி, கடந்த காலப் போட்டிகளிலும் இலங்கையின் மேலாதிக்கத்தையே காட்டுகின்றது.

லசித் மாலிங்கவுக்கு நல்வரவு

ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில்…

எனினும், அண்மைக்காலமாக சர்வதேச போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணியினர் கடந்த ஆண்டு  டெஸ்ட் அந்தஸ்தினையும் பெற்றுக் கொண்டு இப்போதைய நாட்களில் உலகின் எந்த அணிக்கும் சவால்தரக் கூடியவர்களாக இருக்கின்றனர். இதற்கு இலங்கையும் விதிவிலக்காக இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற ஒரு நாள் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற ஐ.சி.சி. இன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் சம்பியன்களாகவும் கடந்த மார்ச் மாதம் நாமம் சூடி அனைவரதும் கவனத்தினையும் ஈர்த்திருந்தனர். எனவே, இலங்கை அணியினை இதுவரை தோற்கடிக்காத ஆப்கானிஸ்தான் அணி நாளைய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அதற்காக கடுமையான முறையில் முயற்சிக்கலாம்.

மறுமுனையில், ஒரு கசப்பான கடந்த காலத்தில் இருந்து மீண்டு வரும் இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ணத்தின் ஆரம்ப போட்டியில் பங்களாதேஷ் அணியுடனான தோல்வி ஒரு பின்னடைவாக இருந்த போதிலும், குறித்த போட்டியில் மேற்கொண்ட ஒரு சில தவறுகளே தோல்விக்கு பிரதான காரணமாகியிருந்தன. அப்படியான தவறுகளை இலங்கை அணி திருத்திக் கொள்ளும் எனில், நாளைய போட்டியினை தமக்கு சாதகமான ஒரு முடிவுடன் நிறைவு செய்ய முடியும்.

  • வீரர்கள் குழாம்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியினை எடுத்து நோக்கும் அவ்வணியின் துடுப்பாட்டத்துறை அவர்களது பந்துவீச்சுத் துறையினை சற்று பலம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. இதனால், அவ்வணி அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான், மொஹமட் செஹ்சாத், இஹ்சானுல்லாஹ் ஜனாட் மற்றும் நஜீபுல்லா சத்ரான் ஆகியோரிடமிருந்து நிறைய விடயங்களை நாளைய போட்டியில் எதிர்பார்க்கின்றது.

துடுப்பாட்ட வீரர்கள் ஒருபுறமிருக்க அவ்வணியின் மிகப் பெரும் பலமாக அமைவது அதன் பந்துவீச்சுத் துறையாகும். ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், றஹ்மத் ஷா மற்றும் மொஹமட் நபி போன்ற சுழல் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பலமாகும்.

இலங்கை

காயங்களால் தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க போன்ற முக்கிய துடுப்பாட்ட வீரர்களை ஆசியக் கிண்ணத்திற்கு முன்பதாகவே இழந்த இலங்கை அணிக்கு தனது மனைவியின் பிரசவத்தை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியம் வந்திருக்கும் அகில தனன்ஜய ஒரு ஆறுதலாகும்.

இலங்கை அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தமைக்கு ஒரு திறமைவாய்ந்த சுழல் வீரர் இல்லாததும் ஒரு காரணமாகும். இதனை நாளைய போட்டியில் அகில தனன்ஜய நிவர்த்தி செய்வார் என நம்பப்படுகின்றது. அகில ஒரு புறமிருக்க இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை நோக்கினால் அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, திசர பெரேரா, தசுன் ஷானக்க, உபுல் தரங்க ஆகியோர் நம்பிக்கை தரக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இதேவேளை இலங்கை அணி, தொடர்ச்சியாக மோசமாக செயற்பட்டு வரும் குசல் மெண்டிஸிற்கு பதிலாக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு நாளை திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பினை வழங்கலாம் எனக் கூறப்படுகின்றது.  

இவைதவிர இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை அனுபவமிக்க லசித் மாலிங்க முன்னெடுக்க, அவரின் உதவியாளராக சுரங்க லக்மால் இருக்கவுள்ளார். இதேநேரம், இலங்கையின் சுழல் பந்துவீச்சுத்துறை அகில தனன்ஜய, அமில அபொன்சோ, தனன்ஞய டி சில்வா ஆகியோரினால் பலம் பெறுகின்றது.

ஆசியக் கிண்ண தொடரில் இருந்து முழுமையாக விலகிய தமிம் இக்பால்

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்…

  • எதிர்பார்ப்பு வீரர்கள்

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)

மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான ரஷித் கான் ஆப்கான் அணியின் துருப்பு சீட்டு வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். பகுதிநேர துடுப்பாட்ட வீரராகவும் செயற்படும் ஆற்றல் கொண்ட ரஷித் தனது மாய சுழல் மூலம் எந்த வீரரையும் எந்த கணத்திலும் ஆட்டமிழக்கச் செய்யக் கூடியவராகவும் இருக்கின்றார். ராஷித் கான் ஒரு நாள் போட்டிகளில் 14.22 என்கிற மிகச் சிறந்த பந்துவீச்சு சராசரியினைக் காட்டுகின்றார். இதேவேளை, ஆப்கான் அணி கடந்த மாதம் அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்ற ரஷித் கான் 8 விக்கெட்டுக்களை சாய்த்து உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy – AFP

அகில தனன்ஜய (இலங்கை)

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறைக்கு லசித் மாலிங்க எந்தளவுக்கு முக்கியமோ அது போன்று, இலங்கையின் சுழல்பந்து வீச்சுத்துறைக்கு அகில தனன்ஜய இன்றியமையாத வீரராக உள்ளார். கடந்த மாதம் தென்னாபிரிக்க அணியுடனான கடைசி ஒரு நாள் போட்டியில்  வெறும் 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்த தனன்ஜய ஒரு நாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினையும் பதிவு செய்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் நடத்திய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட உள்ளூர் தொடரிலும் அபாரமாக செயற்பட்ட அகில தனன்ஜய நாளைய போட்டியில் இலங்கை அணி மிகவும் நம்பும் ஒருவராக இருக்கின்றார்.

Photo Courtesy – Associated Press
  • மைதான நிலைமைகள்

நாளைய போட்டி நடைபெறும் அபுதாபி நகரில் பொதுவாக உஷ்ணமான காலநிலையே நிலவும் என்பதால், துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்கள் குவிக்க சாதகமான ஒரு நிலையே காணப்படும். எனவே, முதலில் துடுப்பாடும் அணிக்கு வெற்றி வாய்ப்புக்கான நிகழ்தகவுகள் கூடுதலாக இருக்கின்றது.

  • அணிக் குழாங்கள்

ஆப்கானிஸ்தான்

அஸ்கர் ஆப்கான் (அணித்தலைவர்), இஹ்சானுல்லாஹ் ஜனாட், ஹஸ்மதுல்லாஹ் சஹிதி, நஜிபுல்லாஹ் சத்ரான், முனிர் அஹ்மட், ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், அப்தாப் அலம், சயத் சிர்சாத், வபாதர், ஜாவேத் அஹ்மதி, றஹ்மத் சாஹ், மொஹமட் நபி, குல்பதின் நயீப், சபியுல்லா சென்வாரி, சரபுத்தின் அஸ்ரப், மொஹமட் செஹ்சாத்

இலங்கை

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), அமில அபொன்சோ, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், தில்ருவான் பெரேரா, குசல் பெரேரா, திசர பெரேரா, கசுன் ராஜித, தசுன் சானக்க, தனன்ஞய டி சில்வா, உபுல் தரங்க

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<