இலங்கைக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

818

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறைவு செய்த இங்கிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கீட்டோன் ஜென்னிங்ஸ் பெற்றுக்கொண்ட சதத்தோடு இலங்கை அணிக்கு மிகவும் கடின வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயம் செய்துள்ளது.

சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரத்தினால் இரண்டாம் நாளிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே காலி நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின்

நேற்று (7) போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் (203) துடுப்பாட்டத்தை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 38 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்ததுடன் இலங்கை அணியினை விட 177 ஓட்டங்களால் முன்னிலையும் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணிக்காக நேற்றைய நாளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வந்திருந்த கீட்டோன் ஜென்னிங்ஸ் 26 ஓட்டங்களோடும், ரோரி பேன்ஸ் 11 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இன்று (8) ஆட்டத்தின் மூன்றாம் நாளில் இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்கோடு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடர்ந்தது.

எனினும், இன்றைய நாளில் சிறந்த ஆரம்பத்தை காட்டத் தவறிய இங்கிலாந்து அணி ரோரி பேன்ஸ், புதிய துடுப்பாட்ட வீரர் மொயீன் அலி ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்தது. ரோரி பேன்ஸ் திமுத் கருணாரத்னவினால் ரன் அவுட் செய்யப்பட்டு 23 ஓட்டங்களுடன் ஓய்வறை நடக்க, மொயீன் அலி கடந்த இன்னிங்ஸில் ஓட்டங்கள் எடுக்காதது போன்று இம்முறை வெறும் 3 ஓட்டங்களுடன் ஏமாற்றியிருந்தார்.

தொடர்ந்து புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டும் நிலைக்கவில்லை. ரூட்டும் மொயீன் அலி போன்று வெறும் 3 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இப்படியானதொரு நிலையில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர் கீட்டோன் ஜென்னிங்ஸ், ரூட்டின் இடத்தை நிரப்ப வந்த பென் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்து பொறுமையான முறையில் இங்கிலாந்து அணியின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினார்.

இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டம் மெதுவாக கட்டியெழுப்பட்ட நிலையில் கீட்டோன் ஜென்னிங்ஸ் அரைச்சதத்தினை மூன்றாம் நாளின் மதிய போசனத்திற்கு முன்பாக பூர்த்தி செய்தார்.

மதிய போசனத்தை அடுத்தும் தொடர்ந்த இவ்விரு வீரர்களினதும் இணைப்பாட்டம் நூறு ஓட்டங்களை (107)  தாண்டியது. இந்த இணைப்பாட்டத்திற்குள் பென் ஸ்டோக்ஸ் தனது 15ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்து தில்ருவான் பெரேராவினால் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும் போது 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த கீட்டோன் ஜென்னிங்ஸ் மூன்றாம் நாளுக்கான போட்டியின் தேநீர் இடைவேளையின் போது சதத்தை நெருங்கினார். ஜென்னிங்ஸ் சதத்தை நெருங்கிய வேளையில் இங்கிலாந்து அணி இலங்கை அணியைவிட 350 ஓட்டங்களால் முன்னிலை அடைந்து மிகவும் வலுவான நிலை ஒன்றுக்கு சென்றது.

தேநீர் இடைவேளையின் பின்னர் கீட்டோன் ஜென்னிங்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது 2ஆவது சதத்தினை பதிவு செய்தார். இதனை அடுத்து 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் ஐந்தாவது விக்கெட்டுக்காக அரைச்சத (77) இணைப்பாட்டம் ஒன்றினையும் பகிர்ந்து உதவியிருந்தார்.

ஜோஸ் பட்லரினை அடுத்து களம் வந்த பென் போக்ஸும் ஜென்னிங்ஸுடன் இணைந்து அரைச்சத இணைப்பாட்டம் (64) ஒன்றினை பகிர்ந்தார். இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 322 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

Photos: Sri Lanka vs England | 1st Test – Day 3

ThePapare.com | Viraj Kothalawala | 08/11/2018 Editing and re-using images without

இங்கிலாந்து அணி தமது ஆட்டத்தினை நிறுத்தும் வரை ஆட்டமிழக்காது இருந்த கீட்டோன் ஜென்னிங்ஸ் 280 பந்துகளில் 9 பெளண்டரிகள் அடங்கலாக 146 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய பென் போக்ஸ் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியதோடு அகில தனன்ஜய ஒரு விக்கெட்டினை தனக்காகப் பெற்றிருந்தார்.

இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட்டில் மாற்றமில்லை: இலங்கை கிரிக்கெட்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி, மூன்றாம் நாளின் ஆட்ட நிறைவின் போது 15 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்படுகின்றது.  

இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 447 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன 7 ஓட்டங்களுடனும், கெளஷால் சில்வா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்கின்றனர்.  

ஸ்கோர் விபரம்

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க