கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு 2024 ஒலிம்பிக் வரை விஷேட கொடுப்பனவு

94

ஜப்பானின் கிபு நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் முதல், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வரை பூரண அனுசரணை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை அஞ்சலோட்ட அணி

டென்மார்க்கின் தம்பரே நகரில் இடம்பெற்ற உலக கனிஷ்ட …

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வேண்டுகோளுக்கு அமைய ஐந்து தனியார் நிறுவனங்கள் நிபந்தனை அடிப்படையிலான அனுசரணை வழங்க முன்வந்துள்ளன.  

இதன்படி, ஜப்பானின் கிபு நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற ஒன்பது வீரர்களுக்கும் இந்த மாதத்திலிருந்து மாதாந்தம் 75,000 ரூபா அனுசரணை வழங்கப்படவுள்ளது. அதேபோல வீரர்களுக்கும், அவர்களது பயிற்றுவிப்பாளர்களுக்கும் 2024ஆம் ஆண்டு வரை 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவொன்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு அனுசரணை வழங்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

கனிஷ்ட வீரர்களுக்கு அனுசரணை வழங்கும் வைபவத்தின்போது

இதில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்கள் எமது மெய்வல்லுனர் விளையாட்டின் பெறுமதி மிக்க சொத்துக்களாகும். விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கு எமக்கு நீண்டகால திட்டங்கள் தேவை. எனவே, 2024இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த கனிஷ்ட வீரர்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்காக நாங்கள் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளவும் முன்வந்தோம். எனவே, வீரர்களுக்கு கிடைக்கின்ற இந்த பணத்தை விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய விடயங்களுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும். மாறாக தனிப்பட்ட அல்லது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடாது. அதேபோல, குறித்த ஒன்பது வீரர்களையும், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தொடர்ச்சியாக கண்காணித்து வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனரில் மலையக வீரர் சண்முகேஸ்வரனுக்கு தங்கப் பதக்கம்

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் …

இந்த அனுசரணை வழங்கும் வைபவத்தில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் புவனேக ஹேரத், தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, அனுசரணை நிறுவனங்கள் சார்பில் எல்.பெர்னாண்டோ (எக்செஸ் எஞ்ஜினியரிங்), ஹேமக்க டி சில்வா (பெயார்வேஸ் ஹோல்டிங்ஸ்), ஆர். ரெங்கநாதன் (செலிங்கோ லைப் காப்புறுதி), அஷோக் பத்திரகே (சொப்ட் லொஜிக் பிஎல்சி) ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணி, இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என 09 பதக்கங்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5ஆவது இடத்தைப் பெற்று ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் புதிய வரலாறு படைத்தது.

இதில் அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியிலும் புதிய ஆசிய மற்றும் இலங்கை சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.  

அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான டிலிஷி ஷியாமலி குமாரசிங்க, பெண்களுக்கான 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பசிந்து கொடிக்கார வெள்ளிப் பதக்கத்தையும், தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று கொடுத்தனர்.

அத்துடன், பெண்களுக்கான 4X400 அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 4X400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் இலங்கை அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…