நேபாளத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இலங்கை கபடி அணி

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்று (06) நடைபெற்ற கபடி போட்டிகளின் அடிப்படையில், இலங்கை ஆண்கள் அணியானது நேபாளம் அணியை வெற்றிக்கொண்டதுடன், இலங்கை பெண்கள் அணி ஒரு புள்ளியால் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

இலங்கை ஆண்கள் அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்த போதும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

தற்பொழுது இந்தோனேஷியாவின் ஜகார்த்தா……

எனினும், இன்று நடைபெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி போட்டித் தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. இலங்கை ஆண்கள் அணி 34-22 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளம் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தது.

பங்களாதேஷ் பெண்கள் மற்றும் இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறப்பான போட்டியில், பங்களாதேஷ் மகளிர் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதல் பாதியில் இலங்கை மகளிர் அணி 9-7 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியின் இறுதியில் 17-16 என்ற புள்ளிகள் கணக்கில் பங்களாதேஷ் அணி வெற்றியை தனதாக்கியது.

  • இரண்டாவது நாள் போட்டி முடிவுகள்

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்று (05) நடைபெற்ற கபடி போட்டிகளில், இலங்கை ஆண்கள் கபடி அணி, இந்தியா அணியிடம் தோல்வியை சந்தித்ததுடன், மகளிர் அணியும் தோல்வியை தழுவியது.

இன்று காலை நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை ஆண்கள் அணி, 49-16 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 25-9 முதற்பாதியில் முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை செலுத்தி இலகுவாக வெற்றிபெற்றது.

பெண்களுக்கான இன்றைய கபடி போட்டியில், நேபாளம் அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி கடுமையாக போராடிய போதும் 28-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

  • முதல் நாள் போட்டி முடிவுகள்

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்று (04) ஆரம்பமாகிய கபடி போட்டிகளில், இலங்கை ஆண்கள் அணி முதல் வெற்றியை பெற்றதுடன், இலங்கை மகளிர் அணி தோல்வியை சந்தித்தது.

பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை கபடி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. முதற்பாதியில் 17-09 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த இலங்கை அணி, இரண்டாவது பாதியில் 29-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்தது.

அதேநேரம், பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை அணி பலம் மிக்க இந்திய மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

குறித்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி ஆதிக்கத்தை செலுத்தியது. குறிப்பாக அதிகமான ரெய்ட் புள்ளிகளை பெற்றுக்கொண்ட இந்திய மகளிர் அணி, முதல் பாதியில் 25-06 என்ற புள்ளிகள் கணக்கில் மிகச்சிறந்த முன்னிலையை பெற்றுக்கொண்டது.

>>Photo: Day 4 | South Asian Games 2019<<

இரண்டாவது பாதியில் இலங்கை அணி முன்னேற்றம் அடையும் என்ற எதிர்பார்த்த போதிலும், இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி 53-14 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது.

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<