SAG கிரிக்கெட்: நேபாளத்தை வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

69

தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இன்று நேபாளத்தினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 தொடரில் தாம் முன்னர் விளையாடிய போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என போட்டி முடிவுகளை காட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தமது அடுத்த மோதலில் நேபாளத்தை இன்று (6) எதிர்கொண்டது.

மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி இலகு வெற்றி

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை…

தொடர்ந்து போக்காரவில் ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவி ஹர்சித மாதவி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. அணியின் துடுப்பாட்டம் சார்பில் லிஹினி அப்சாரா 27 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், ஜனதி அனாலி 35 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதேநேரம் நேபாள மகளிர் அணியின் பந்துவீச்சில் சரஸ்வதி குமாரி மற்றும் சோனு கட்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 118 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நேபாள மகளிர் கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காண்பித்தது. 

பின்னர் தொடர்ச்சியாக இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க தவறிய அவ்வணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தினை பின்தள்ளிய விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய…

நேபாள அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதன் ருபினா சேட்ரி பெற்ற 19 ஓட்டங்களளே அவரின் தரப்பில் வீராங்கனை ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

இதேநேரம் இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் சச்சினி நிஷன்சல 3 விக்கெட்டுக்களை சாய்த்தும் சத்யா சந்தீப்பனி 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் – 118/7 (20) லிஹினி அப்சரா 37(27), ஜனதி அனாலி 35(36), சோனு கட்கா 13/2(4), சரஸ்வதி குமாரி 26/2(4)

நேபாளம் மகளிர் – 77/9 (20) ருபினா சேட்ரி 19(28), சத்யா சந்தீப்பனி 5/2(4), சச்சினி நிசன்சல 16/3(4)

முடிவு – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 41 ஓட்டங்களால் வெற்றி 

>>SAG செய்திகளைப் படிக்க<<