ஹர்ஷவின் சதம் வீண் : தீர்மானம் மிக்க போட்டியில் 4 ஓட்டங்களால் கிளிநொச்சி மாவட்டம் தோல்வி

782
SLC District Tournament

கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கிடையிலான திர்மானம் மிக்க விறுவிறுப்பான போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதிலும், இறுதிநேர சிறப்பான பந்து வீச்சின் மூலம் வவுனியா மாவட்டம் நான்கு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெற்று வரும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் சுற்றுப் போட்டிக்காக வடக்கைச் சேர்ந்த கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு இடையிலான போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் யாழ் மாவட்டம் வென்றி பெற்று குழு மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், இவ்விரு அணிகளும் இதுவரை எவ்விதமான புள்ளிகளையும் பதிவு செய்யாத நிலையில், போட்டியை வெற்றி கொள்ளும் நோக்கில் களமிறங்கின.

இலங்கைக் குழாமில் பிரதீப் மற்றும் குலசேகர : வெளியேற்றப்பட்ட திக்வெல்ல

அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட அணித் தலைவர் மகேஷ் பிரியதர்ஷன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். துடுப்பாட்டத்துக்கு மிகவும் உகந்ததாக அமைந்திருந்த இந்த களத்தில் வவுனியா ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அகில லக்க்ஷான் மற்றும் தறிந்து டில்ஷான் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களை தங்களுக்கு இடையில் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

கிளிநொச்சி அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட இந்த இணைப்பாட்டம் ரண்டிவ் மூலம் முறியடிக்கப்பட்டது. 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றிருந்த தறிந்து டில்ஷான்,  சுராஜ் ரண்டிவ்வின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார்.

அதனையடுத்து களமிறங்கிய ரங்கன அழுத்கே நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை. 15 ஓட்டங்களுக்கு சங்கீத் குரேயின் பந்து வீச்சில் இரோஸ் சமரவீரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் அவரை தொடர்ந்து களம் வந்த சமித் துஷந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அகில லக்க்ஷான் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 79 ஓட்டங்களை பெற்ற நிலையில் கசுன் ராஜிதவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய பாலித குமார உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 9 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி ஓய்வு பெற்றார்.

அதனை தொடர்ந்து வவுனியா மாவட்ட அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு சீரான இடைவெளிகளில் விழ ஆரம்பித்தது. நிதானமாக துடுப்பாடிய சமித் துஷந்த 70 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து சென்றார்.

அதிரடியாக துடுப்பாடிய மகேஷ் பிரியதர்ஷன, 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 28 ஓட்டங்களை பெற்றிருந்த போது கசுன் ராஜிதவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அந்த வகையில் 50 ஓவர்கள் நிறைவில் வவுனியா மாவட்ட அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களை பெற்றது.

கசுன் ராஜித மற்றும் சுராஜ் ரண்டிவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அதேவேளை, ஷேஹான் மதுஷங்க, சங்கீத் குரே மற்றும் ஹர்ஷிக்க பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றிக் கொண்டனர்.

பின்னர் 283 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கிளிநொச்சி அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான கயந்த விஜயதிலக்க முதலாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இரோஸ் சமரவீரவை ஓட்டமெதுவும் இன்றி நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்

எனினும், இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஹர்ஷா குரே சங்கீத் குரேயுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதேநேரம், இரண்டாவது விக்கெட்டுக்காக 167 ஓட்டங்களை பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டனர். வவுனியா மாவட்ட அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இவ்விணைப்பாட்டதினை, பந்து வீசிய மஞ்சுல ஜெயவர்தன சங்கீத் குரே கவனக் குறைவால் அடித்த பந்தை பிடியெடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

அதனையடுத்து களத்துக்கு வந்த தேனுவன் ராஜகருண வந்த வேகத்திலேயே ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சென்றார். அவரை தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி கீத் குமார நான்காவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட வேளை, 26 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மஞ்சுள ஜயவர்தனவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து செல்ல, போட்டி மேலும் விறுவிறுப்பானது.

சிறப்பாக துடுப்பாடிய அணித் தலைவர் ஹர்ஷா குரே 126 ஓட்டங்களை பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டிருந்த வேளையில் மகேஷ் பிரியதர்ஷனவின் பந்து வீச்சில் மஞ்சுள ஜெயவர்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதேநேரம், இறுதி நான்கு ஓவர்களில் சாராசரியாக 6.60 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் ஷேஹான் மதுஷங்க அதிரடியாக துடுப்பாடி நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 19 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை LBW முறையில் ஆட்டமிழக்க போட்டியின் நிலையில் மேலும் தீவிரம் அடைந்தது.

இறுதியில் இரண்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில் இரண்டு விக்கெட்டுகள் கையிருப்பில் 12 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் கிளிநொச்சி மாவட்டம் நெருக்கடியில் இருந்தது.

பாரிய அழுத்தத்தின் மத்தியில் பந்து வீசிய சசிந்து பெரேரா பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களை சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து வவுனியா அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக பந்து வீசிய அவர் இறுதி நேரத்தில் ஓட்டங்களை மட்டுப்படுத்தியதுடன், 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் தீர்மானம் மிக்க இந்த போட்டியில் 4 ஓட்டங்களால் வவுனியா மாவட்ட அணி வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

வவுனியா மாவட்ட அணி: 283/10 (50 ஓவர்கள்) அக்கில லக்க்ஷான் 79, சமித் துஷந்த 70, தறிந்து டில்ஷான் 37, மகேஷ் பிரியதர்ஷன 28, உதிரிகள் 26, கசுன் ராஜித 54/2, சுராஜ் ரன்திவ் 54/2

கிளிநொச்சி மாவட்ட அணி: 279/10 (50) சங்கீத் குரே 65, ஹர்ஷா குரே 126, ஷேஹான் மதுசங்க 31, கீத் குமார 26, மஞ்சுள ஜெயவர்தன 42/3, சசிந்து பெரேரா 44/3, மகேஷ் பிரியதர்ஷன 43/2, கயந்த விஜயதிலக்க 59/2

போட்டி முடிவு: வவுனியா மாவட்ட அணி 4 ஓட்டங்களால் வெற்றி