காலியில் இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாமை, தேசிய அணியின் தேர்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குழாமின் மூலம் மீண்டும் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் இடது கை சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் சந்திமால், நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் வழிநடாத்தவுள்ளார். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் குழாமானது 8 துடுப்பாட்ட வீரர்கள், 3 சுழல் வீரர்கள் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.

சொந்த மண்ணில் இந்தியாவிற்கெதிராக இலங்கை பெற்ற சாதனை வெற்றிகள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றது ..

கடந்த ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரின் போது, காயத்திற்கு உள்ளாகியிருந்த நுவன் பிரதீப் தற்போது உடல்நிலை தேறியிருப்பதால், இக்குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான பிரதீப் ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரோடு சேர்த்து அணியின் வேகப்பந்து வீச்சு துறையை பலப்படுத்த ஏனைய மூன்று வீரர்களாக சுரங்க லக்மால், லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தில், அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்திருந்த வீரரான தனஞ்சய டி சில்வா தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது அணித்தலைவர் சந்திமால் அணியில் இல்லாத காரணத்தினால் இந்திய அணியுடனான தொடர், அவரிற்கு தனது திறமையை நிரூபிக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை எற்படுத்தித் தந்துள்ளது.

அதேபோன்று, இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிசிறந்த சுழல் வீரராக திகழும், புஷ்பகுமார இக்குழாமில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். முதல்தரப் போட்டிகளில் 19.85 என்ற சராசரியில் 558 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியிருக்கும் அவர் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. இந்திய அணியுடனான தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்படும் புஷ்பகுமார, லக்‌ஷான் சந்தகனிற்கு பதிலாகவே அணியில் பிரதியிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் குழாம்

ரங்கன ஹேரத் (அணித்தலைவர்), உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, மலிந்த புஷ்பகுமார, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து