இராணுவ அரை மரதன் ஓட்டத்தில் சம்பியனாகிய சண்முகேஸ்வரன்

167
Gunner.lk

இலங்கை இராணுவத்தினால் 54ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான அரை மரதன் ஓட்டப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 140 வீரர்கள் பங்குபற்றியிருந்த இம்முறைப் போட்டியானது நாகொடையிலிருந்து ஹிக்கடுவை வரையான 27 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெற்றது.

இதன்படி, இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 4ஆவது தடவையாகவும் ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றார்.

ஆசிய தகுதிகாண் போட்டியில் சண்முகேஸ்வரன் மற்றும் சப்ரினுக்கு வெற்றி

ஆண்களுக்கான …..

குறித்த போட்டியை ஒரு மணித்தியாலமும் 07.28 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது முதலாவது வெற்றியையும் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, 2016இல் 4ஆவது இடத்தையும், 2017இல் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட சண்முகேஸ்வரன், கடந்த வருடம் இராணுவ அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

மெய்வல்லுனர் அரங்கில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த சண்முகேஸ்வரன், கடந்த வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஜனவரி மாதம் நுவரெலியாவில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி நகர்வல ஓட்டப் போட்டியில் முதற்தடவையாகப் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்த அவர், போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியையும் பதிவுசெய்திருந்தார்.

ஆசிய மெய்வல்லுனர் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

கட்டாரின் டோஹா நகரில் அடுத்த மாதம் 21ஆம்  …

இதேவேளை, இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ சமிக்ஞைப் பிரிவைச் சேர்ந்த டி.எம் தஸநாயக்க (ஒரு மணி. 08.22 செக்.) இரண்டாவது இடத்தையும், இராணுவ பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ச்த விஜித குமார (ஒரு மணி. 08.37 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் நான்காவது இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த எஸ்.டி லியனகே (ஒரு மணி. 21.22 செக்.) முதலிடத்தையும், இரண்டாவது இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த எஸ்.என் பண்டார (ஒரு மணி. 25.42 செக்.) இரண்டாவது இடத்தையும், அதே படைப் பிரிவைச் சேர்ந்த மலையக வீராங்கனையான கிருஷ்ண குமாரி (ஒரு மணி. 31.56 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<