இலங்கையின் உலகக் கிண்ண நாயகன் – சனத் ஜயசூரிய

607
GETTY IMAGES

மிக வேகமாக ஓட்டங்கள் குவிக்கப்படும் T20 போட்டிகளின் பிதா என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சனத் ஜயசூரியவினை கூற முடியும்.

தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில்  திருப்புமுனையினை ஏற்படுத்திய ஜயசூரிய, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை வெல்வதற்கு சகலதுறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தார்.

உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகள் கிரிக்கெட் இரசிகர்கள்…

உலகக் கிண்ணம் போன்ற பல்தேச அணிகள் பங்குபெறும் முன்னணி  கிரிக்கெட் தொடர் ஒன்றில், பொதுவாக தொடர் நாயகன் விருது அத்தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படும் ஒருவருக்கு அல்லது பந்துவீச்சில் சிறப்பாக செயற்படும் ஒருவருக்கே வழங்கப்படும். எனினும், சனத் ஜயசூரிய 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறைகளிலும் ஜொலித்து தொடர் நாயகன் விருதினை வென்றார்.

அந்தவகையில் சனத் ஜயசூரிய 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தொடர் நாயகன் விருது பெறுவதற்கான காரணங்கள் என்ன?

வாருங்கள் கடந்த காலத்தை மீட்டுவோம்….

இந்தியாவிற்கு எதிரான மிரட்டல் துடுப்பாட்டம்

இலங்கை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெற்ற முதல் வெற்றியினை இந்திய அணிக்கு எதிராக 1979 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ணம் மூலம் பெற்றுக் கொண்டது. இதுவே இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் கிடைத்த முதல் கௌரவமாகும்.

அதனைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு மற்றுமொரு கெளரவம் கிடைக்கின்றது. இந்த கெளரவத்தினை இலங்கை அணி குறித்த ஆண்டின் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பெற்றுக் கொண்டது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி, 1996 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி விளையாட வேண்டிய முதல் இரண்டு குழுநிலைப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் விளையாட மறுத்திருந்தன. இதனால், குறித்த போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தமது மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட இலங்கை அணி அதில் இலகு வெற்றி ஒன்றை பதிவு செய்தது.

இங்கே இலங்கை அணி அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் விளையாடாமலேயே வெற்றி பெற்றது. இலங்கை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணியும் அவ்வளவு பலமான அணி கிடையாது. இதனால், சவால் தரக்கூடிய அணிக்கு எதிரான வெற்றி ஒன்றினை 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை எதிர்பார்க்கின்றது.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்த அந்த வெற்றி, டெல்லியில் இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் கிடைத்தது. இவ்வெற்றிக்கு சனத் ஜயசூரிய முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

குழுநிலை மோதலாக அமைந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி அதன் தலைவர் மொஹமட் அஸாருதீன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சிறப்பு துடுப்பாட்டங்களோடு சவால்கூடிய 272 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

போட்டியின் வெற்றி இலக்கு பெரியது என்பதால், இலங்கை அணிக்கு ஒரு அட்டகாசமான ஆரம்பம் தேவைப்பட்டது. இந்த ஆரம்பத்தினை சனத் ஜயசூரியவே பெற்றுத் தந்தார். இப்போட்டியில் 76 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட ஜயசூரிய, 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களை குவித்திருந்தார்.

Getty Images

ஜயசூரியவின் இந்த அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கிடைத்த சிறந்த தொடக்கம், பின்னர் ஹஷான் திலகரட்ன, அர்ஜுன ரணதுங்க ஜோடிக்கு இந்திய அணியுடனான வெற்றி இலக்கை எட்ட இலகுவாக உதவியது. இந்த இரண்டு வீரர்களும் ஐந்தாம் விக்கெட்டுக்காக 131 ஓட்டங்களை பகிர்ந்து போட்டியின் வெற்றி இலக்கினை இலங்கை அணி 48.4 ஓவர்களில் அடைய பங்களிப்புச் செய்தனர்.

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

இலங்கை அணியும், இந்திய அணியும் 1996ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில்…

இப்போட்டியோடு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி, தமது நான்காவது வெற்றியினை பதிவு செய்தது. இலங்கை அணி வெற்றிபெற காரணமாக இருந்த சனத் ஜயசூரிய, ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.

உலக சாதனைக்கான அடித்தளம்

இந்திய அணியுடனான போட்டியினை அடுத்து இலங்கை அணி, குறித்த உலகக் கிண்ணத் தொடரில் கென்யாவுடன் தமது இறுதி குழுநிலைப் போட்டியில் மோதியது.  

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை உலக சாதனை ஒன்றினை செய்யப் போகின்றது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கென்ய அணி வீரர்களால் இலங்கை அணியினர் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்டனர்.  

முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த ஜயசூரிய அதிரடி காட்டத் தொடங்கி கென்ய பந்துவீச்சாளர்களை மீண்டும் ஒருமுறை தனது அதிரடி துடுப்பாட்டத்தினால் சிதறடித்தார்.

எனினும், ஜயசூரியவின் துடுப்பாட்டத்தினால் மிகப் பெரிய சேதம் ஒன்று ஏற்பட முன்னரே அவரின் விக்கெட்டினை கென்ய வீரர்கள் அதிஷ்டவசமாக கைப்பற்றிவிட்டனர். எனினும், இப்போட்டியில் ஆட்டமிழக்கும் போது ஜயசூரிய வெறும் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஜயசூரிய ஆட்டமிழந்த போதிலும் அவர் இப்போட்டியில் ஆரம்பித்து வைத்த அதிரடி துடுப்பாட்டத்தினை அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் தொடர்ந்தனர்.

அரவிந்த டி சில்வா 115 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 14 பெளண்டரிகள் அடங்கலாக 145 ஓட்டங்களை குவிக்க, அசங்க குருசிங்க 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேநேரம், அர்ஜுன ரணதுங்க 40 பந்துகளில் 75 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர் கிரிக்கெட் இரசிகர்களால்…

இந்த வீரர்கள் அனைவரிதும் அதிரடித் துடுப்பாட்ட உதவியினால் இலங்கை அணி, கென்ய அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து 398 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. இது அப்போதைய காலகட்டத்தில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற உலக சாதனையாகவும் மாறியது.  

தொடர்ந்து இப்போட்டியில் இலங்கை அணி கென்ய வீரர்களை 144 ஓட்டங்களால் தோற்கடித்து 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் நொக்அவுட் சுற்றுக்கு ஐந்து வெற்றிகளுடன் முன்னேறியது.

கென்ய அணியுடனான போட்டியில் உலக சாதனை ஒன்றை செய்வதற்கான அடித்தளத்தை தனது அதிரடி மூலம் சனத் ஜயசூரியவே போட்டிருந்தார்.

இங்கிலாந்தை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றல்

தமது குழுநிலைப் போட்டிகள் எதிலும் தோல்வியினை தழுவாத இலங்கை அணி, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதிய உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டி பாகிஸ்தான் பைசலாபாத் நகரில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சினை சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறியதனால் நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்த உலகக் கிண்ணத் தொடரின் முன்னைய போட்டிகளில் சனத் ஜயசூரிய துடுப்பாட்ட வீரராகவே இலங்கை அணிக்கு பெரிதும் உதவியிருந்தார். எனினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சனத் ஜயசூரிய ஒரு பந்துவீச்சாளராகவும் தனது பங்களிப்பினை வழங்கினார். அதன்படி, இங்கிலாந்து அணியில் பறிபோயிருந்த எட்டு விக்கெட்டுகளில் இரண்டு சனத் ஜயசூரியவினால் கைப்பற்றப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 236 ஓட்டங்களை அடைய பதிலுக்கு இலங்கை அணி துடுப்பாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இப்போட்டியிலும் வந்த சனத் ஜயசூரிய, வெறும் 30 பந்துகளில் அரைச்சதம் கடந்து, உலகக் கிண்ணத் தொடர்களில் அப்போது வேகமாக பெறப்பட்ட அரைச்சதத்தினையும் பதிவு செய்தார்.

தொடர்ந்தும் அதிரடி காட்டிய ஜயசூரிய பின்னர் ஆட்டமிழந்து, 44 பந்துகளில் 13 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 82 ஓட்டங்களை குவித்துக் கொண்டார்.

சனத் ஜயசூரியவின் இந்த அதிரடி துடுப்பாட்டம் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு போதுமாக இருந்தது. அதன்படி, போட்டியின் வெற்றி  இலக்கினை இலங்கை அணி வெறும் 40.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது. இலங்கை அணியின் வெற்றிக்கு அசங்க குருசிங்கவும் 45 ஓட்டங்களோடு உதவியிருந்தார்.

இப்போட்டியில் சனத் ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தினால் வெற்றி பெற்ற இலங்கை அணி, உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் தடவையாக தெரிவாகியது.

மீண்டும் இந்திய அணிக்கு மிரட்டல்

இலங்கை ரசிகர்களுக்கு, 1996 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரில் மறக்க முடியாத போட்டி எனில், அது அந்த தொடரின் அரையிறுதிப் போட்டியாகவே இருக்கும்.

கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 252 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நவ்ஜோட் சிதுவினை ஆரம்பத்திலேயே இழந்த போதிலும் சச்சின் டென்டுல்கர், சஞ்சய் மன்ஜேக்கார் ஜோடி நம்பிக்கை தந்தது.

பின்னர் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் இந்திய அணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திச் சென்று கொண்டிருந்தனர். இதில் சச்சின் டென்டுல்கர் தனது அரைச்சதத்தினை பூர்த்தி செய்த வண்ணம் காணப்பட்டிருந்தார். இப்படியாக அனைத்தும் இந்திய அணிக்கு சார்பாக சென்று கொண்டிருந்த தருணத்தில் சனத் ஜயசூரிய சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டினை வீழ்த்தினார். டெண்டுல்கர் 65 ஓட்டங்களை பெற்றவாறு மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

அப்போது இந்திய அணி  98 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும், சனத் கைப்பற்றிய இந்த விக்கெட்டோடு போட்டியே தலைகீழாக மாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 120 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது.

இம்முறை உலகக் கிண்ணம் குறித்து குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான…

இந்திய அணியின் இந்த நிலையினை கண்ட அதன் ரசிகர்கள் மைதானத்தில் கலவரம் செய்யத் தொடங்கினர். இதனால், இலங்கை – இந்திய அணிகள் இடையிலான 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தொடரின் அரையிறுதிப் போட்டி நிறுத்தப்பட்டு, இலங்கை அணி  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் இந்திய அணியினை நெருக்கடிக்கு உள்ளாக்கிய சனத் ஜயசூரிய, வெறும் 12 ஓட்டங்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுகளை சுருட்டி இலங்கையின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தார்.

சனத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சினால், 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி அதில் அவுஸ்திரேலியாவினை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றது.

இப்படியாக, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரினை இலங்கை வெல்வதற்கு அதன் ஒவ்வொரு போட்டிகளிலும் சனத் ஜயசூரிய தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இதேநேரம், இந்த ஆண்டு நடைபெறப் போகும் உலகக் கிண்ணத் தொடரிலும் சனத் ஜயசூரிய போன்ற ஒருவர், இலங்கை அணிக்கு உதவி செய்து உலகக் கிண்ணம் ஒன்றை வெல்ல வைக்க வேண்டும் என்பதே இலங்கை ரசிகர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<